Published : 24 Sep 2018 11:10 AM
Last Updated : 24 Sep 2018 11:10 AM

ரபேல் விமான ஒப்பந்தம்: உண்மைக்கு எந்த முகம்?- ஜேட்லியிடம் ப.சிதம்பரம் கேள்வி

 ரபேல் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கப் போடப்பட்டஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில் அக்கட்சித் தலைவர்களுக்கும் பாஜக தலைவர்களுக்கும் இடையே வார்த்தைப் போர் முற்றி வருகிறது.

இதுகுறித்துத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிதம்பரம், ''உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் ஜேட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டுபிடிப்பது?

இரண்டு வழிகள்தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ?

ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டுபிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சையின் பின்னணி

பிரான்ஸ் நிறுவனத்துடன் 36 ரபேல் போர் விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் போடப்பட்டஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. ரபேல் போர் விமானத் தயாரிப்பை மத்திய அரசின் ஹெச்யுஎல் நிறுவனத்துக்கு வழங்காமல் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் வழங்கியது குறித்தும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி வந்தது.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோலண்டே, இந்திய அரசு கூறியதால், ரிலையன்ஸ்நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளித்தோம் என்று பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்தார். இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பையும், மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.

பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், ரூ.1.30 லட்சம் கோடி ஊழல் செய்தார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளும் கடுமையாக மத்திய அரசை விமர்சித்தன.

அதைத்தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹோலண்டே முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். டசால்ட் நிறுவனமே ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்தது என்று நீண்ட விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் ப.சிதம்பரம் ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக் கோரியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x