டெல்லியில் வீட்டின் முன்பு பாஜக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு: கேமராவில் பதிவானது மர்ம நபரின் தாக்குதல்

டெல்லியில் வீட்டின் முன்பு பாஜக எம்.எல்.ஏ. மீது துப்பாக்கிச் சூடு: கேமராவில் பதிவானது மர்ம நபரின் தாக்குதல்
Updated on
1 min read

டெல்லியில் பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் மீது மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

எம்.எல்.ஏ.வின் விட்டின் முன்பு நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம், சிசிடிவி கேமராவில் பதிவானது. அதன் அடிப்படையில் தாக்குதல் நடத்திய மர்ம நபர் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் வசிக்கும் பாஜக எம்.எல்.ஏ. ஜிதேந்தர் சிங் வீட்டுக்கு இன்று காலை வந்த மர்ம நபர், அழைப்பு மணியை தொடர்ந்து அழுத்தியுள்ளார்.

அதையடுத்து, கதவைத் திறந்து வெளியே வந்த ஜிதேந்தர் சிங்கிடம், சில கோப்புகளை காண்பித்து, அதனை உறுதிப்படுத்த கையெழுத்து பெற வந்ததாக கூறியுள்ளார்.

கோப்புகளை பெற்ற ஜித்தேந்தர், அதனை பார்வையிடும் நேரத்தில், ஜிதேந்தரை திடீரெனத் தாக்கத் தொடங்கினார். அதன்பின், அந்த மர்ம நபரிடம் துப்பாக்கி இருப்பதைத் தெரிந்துகொண்ட ஜிதேந்தர், தான் தாக்கப்படாமல் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போது, ஜிதேந்தரின் பிடியில் இருந்து விலகிய அந்த மர்ம நபர், தன்னிடம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து, ஜிதேந்தர் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இந்தத் தாக்குதலில் ஜித்தேந்தரின் உடம்பில் ஒரு தோட்டா பாய்ந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து மர்ம நபர் சம்பவ இடத்திலிருந்து பைக்கில் தப்பி சென்றார். சிறு காயங்களுடன் ஜிதேந்தர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.

பாஜக எம்.எல்.ஏ. ஒருவரை அவரது வீட்டிலேயே மர்ம நபர் கொலை செய்ய முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையம், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கொலைவெறி தாக்குதல் சம்பவம் ஜிதேந்தர் வீட்டின் முன்பு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

மர்ம நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததாலும், வெளிச்சம் குறைவாக இருந்ததாலும் அவரை அடையாளம் காண முடியவில்லை என்று ஜித்தேந்தர் சிங் கூறியதாக புலனாய்வுத்துறை ஆணையர் அஜய் குமார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் சஞ்ஜய் பேனிவால் விரைந்தார்.

சிசிடிவி பதிவுகளை கொண்டு, பாஜக எம்.எல்.ஏ-வை கொலை செய்ய வந்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in