மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு: இசையுலகினர் கண்ணீர் அஞ்சலி - சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்கிறது

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு: இசையுலகினர் கண்ணீர் அஞ்சலி - சென்னையில் இன்று இறுதி சடங்கு நடக்கிறது
Updated on
2 min read

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட இசையுலகின் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் (45). அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் காலமானார்.

அவரது உடல் வடபழனி தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இளையராஜா, வீணை காயத்ரி..

அவரது உடலுக்கு இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, பாடகி எஸ்.பி.சைலஜா, டிரம்ஸ் சிவமணி மற்றும் வீணை காயத்ரி, உள்ளிட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாண்டலின் ஸ்ரீநிவாஸின் உடல் இன்று மாலை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் எரியூட்டப்படுகிறது. இறுதிச் சடங்குகளும் அங்கு நடைபெறுகிறது.

ஆளுநர், முதல்வர் இரங்கல்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு ஆளுநர் ரோசய்யா, முதல்வர் ஜெயலலிதா மற்றும் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அவர்களது இரங்கல் செய்தி வருமாறு:

ஆளுநர் ரோசய்யா: மாண்டலின் ஸ்ரீநிவாஸின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த மாண்டலின் கலைஞரான அவர் உலகெங்கிலும் நமது நாட்டின் புகழ் பரவச் செய்தவர். மாண்டலின் என்றாலே அவரது நினைவுதான் நமக்கு வரும். அவரது அற்புதமான இசையினால் அனைவரையும் மயக்கி வைத்திருந்தார். மாண்டலின் மேதையின் அகால மறைவால், கர்நாடக இசையுலகில் ஒரு பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வர் ஜெயலலிதா: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன். மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் ஆவார். இசைக் குடும்பத்தில் பிறந்த அவர் தனது மாண்டலின் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர். மத்திய அரசின் பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்ற மாண்டலின் ஸ்ரீநிவாஸின் மறைவு, இசைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர் விட்டுச் சென்ற இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. மாண்டலின் ஸ்ரீநிவாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன்

எவரும் பயன்படுத்தாத மேற்கத்திய வாத்தியமான மாண்டலினை தனது சின்னஞ்சிறு வயதிலேயே பயன்படுத்தி அசத்தியவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். மாபெரும் இசைக் கலைஞர்கள் கொண்ட கர்நாடக இசை சாம்ராஜ்யத்தை தனித்துவ இசையால் தன் வசம் இழுத்தவர் இன்று இல்லை என்பதை நம்ப முடியவில்லை. மாண்டலின் ஸ்ரீநிவாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது சார்பிலும் பாஜக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி இரங்கல்

கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இசை உலகில் மாண்டலின் ஸ்ரீநிவாஸின் அர்ப்பணிப்பு உணர்வு, நீடித்த பங்களிப்பு ஆகியவை எப்போதும் நினைவுகூரப்படும். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in