Last Updated : 07 Sep, 2018 04:34 PM

 

Published : 07 Sep 2018 04:34 PM
Last Updated : 07 Sep 2018 04:34 PM

‘மின்னணு வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க விரைவில் புதிய கொள்கை’: பிரதமர் மோடி உறுதி

நாட்டில் மின்னணு வாகனங்கள் பயன்பாட்டினை ஊக்கப்படுத்தவும், பருவநிலை மாறுபாட்டை எதிர்கொள்ளும் வகையில், பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக மாற்று எரிபொருளில் இயங்கக்கூடிய வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையிலும் தனியாக புதிய கொள்கை விரைவில் வகுக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்தார்.

டெல்லியில் “மூவ்: குளோபல் மொபிலிட்டி” மாநாடு இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

மின்னணு வாகனங்களை அதிகம் இயக்கும் ஓட்டுநர்கள் உள்ள இந்தியாவைக் கட்டமைக்க விரும்புகிறோம். மின்னணு வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், பெட்ரோல், டீசலுக்கு மாற்று எரிபொருள் பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களை அதிகப்படுத்தவும் தனியாக புதிய கொள்கை விரைவில் உருவாக்கப்படும். இதன் மூலம் நாம் பருவநிலைமாறுபாட்டை எதிர்க்க முடியும்.

பருவநிலைமாறுபாட்டை எதிர்க்கும் மிக வலிமையான ஆயுதம் என்பது, சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில், கரியமிலவாயுக்களை வெளியிடாத வாகனங்கள் இயக்குவதுதான். அதாவது, சூழலுக்கு கேடு விளைவிக்காத, காற்று மாசு ஏற்படுத்தாத, நம்முடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் விதத்தில் இருக்க வேண்டும்.

மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள நாடுகளைக் காட்டிலும் நம்நாட்டில் ஏராளமான சாதகமான அம்சங்களும், பாரம்பரிய வலிமையும் நிறைந்துள்ளன. ஆதலால், வேகமாக மாற்று எரிபொருள் திட்டத்துக்கு மாறும் சாத்தியங்கள் நம்மிடம் உள்ளன.

நம்முடைய புதுப்பிக்கத் தக்க எரிசக்தியும், மின்னணு வாகனங்களின் பயன்பாடும் சுற்றுச்சூழலுக்கு ஏராளமான நன்மைகள் அளிக்கும். 2022-ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திரட்ட திட்டமிட்டுள்ளோம். உலகளவில் தற்போது சூரியஒளி மின்சார உற்பத்தியில் 5-வது இடத்திலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் 6-வது இடத்திலும் இருக்கிறோம்.

உலகளவில் மிகப்பெரிய பொருளாதாரத்தை நாம் கொண்டுள்ளோம். நாம் என்ன செய்தாலும், என்ன புதிய கண்டுபிடிப்புகள் கொண்டுவந்தாலும், அது எதிர்காலத் தலைமுறையினருக்கு பயன்படும் வகையில் விட்டுச் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் இந்தியாவின் வாகனப் பயன்பாடு என்பது, ஆங்கிலத்தில் சி என்ற வார்த்தையை குறிப்பிடும் 7 “சி” க்களை கொண்டதாக இருக்கும். பொதுவானது(காமன்), இணைத்தல்(கனெக்ட்), வசதி(கன்வீனியன்ட்), நெருக்கடியைக் குறைத்தல்(கன்ஜெஷன் ப்ரீ), சார்ஜ், சுத்தம்(க்ளீன்), கட்டிங் எட்ஜ் போன்றவை இருக்க வேண்டும் என்பது விருப்பமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x