Published : 05 Sep 2018 08:09 AM
Last Updated : 05 Sep 2018 08:09 AM

மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க பிரதமர் மோடிக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு: ராகுலுக்கு 11 சதவீதம் என கருத்துக்கணிப்பில் தகவல்

இந்தியாவில் மீண்டும் ஆட்சி யமைக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு 48 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. அதேசமயத்தில், காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தியை 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே இருக்கிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. குறிப்பாக, ஆளும் பாஜகவும், காங்கிரஸும் தேர்தல் வியூகங்கள் அமைப்பதில் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன.

இந்த முறை எப்படியாவது பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்றிவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் உறுதியாக இருக்கின்றன. அதன்படி, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வது என்றும், காங்கிரஸ், பாஜக அல்லாத மாநிலக் கட்சிகளை ஒன்றிணைப்பது எனவும் வெவ்வேறு விதமான வியூகங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.

இந்த சூழ்நிலையில், மக்கள் யார் பக்கம் என்பதை அறிவதற்காக பல்வேறு பத்திரிகைகள், செய்தி நிறுவனங்கள் சார்பில் இது தொடர்பான கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘ஐபிஏசி’ என்ற தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என 48 சதவீதம் பேர் தெரிவித்துள் ளனர். அதேசமயத்தில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 11 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள மற்ற தலைவர்களுக்கும் மிகக் குறைந்த அளவிலான மக்கள் ஆதரவே கிடைத்துள்ளது. அந்த வகையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு 9.3 சதவீதம் பேர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 7 சதவீதம் பேரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு 4.2 சதவீதம் பேரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு 3.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்தக் கருத்துக்கணிப்பு முடிவு களை வெளியிட்டுள்ள ‘ஐபிஏசி’ நிறுவனமானது, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுத்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x