Published : 18 Sep 2018 04:53 PM
Last Updated : 18 Sep 2018 04:53 PM

விலை மலிவு என்றால் கூடுதல் விமானம் வாங்க வேண்டியது தானே?- ரபேல் விவகாரத்தில் நிர்மலா சீதாராமனை மடக்கிய அந்தோணி

முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட குறைவான விலைக்கு ரபேல் விமானம் வாங்குவதாக உண்மை என்றால் கூடுதலாக விமானங்களை வாங்க வேண்டியது தானே என பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே. அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ரபேல் போர் விமானம் வாங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். இதற்கு பதிலளித்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறுகையில் ‘‘காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்ததைவிடவும், 9 சதவீதம் குறைவான விலைலேயே ரபேல் விமானங்களை வாங்க பாஜக ஒப்பந்தம் செய்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் தான் ஊழல் நடந்தது. தரமான விமானங்களை பாஜக ஆட்சியில் வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ எனக் கூறினார்.

இதற்கு முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே. அந்தோணி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கடந்த 2000-ம் ஆண்டே விமானப்படைக்கு 126 விமானங்கள் வாங்க வேண்டும் என்று மதிப்பிடப்படது.

18 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சூழல் அதிகம் மாறியுள்ளது. எல்லையில் அதிகமான ஆபத்து உள்ளது. இந்த சூழலிலும் வெறும் 36 விமானங்கள் மட்டுமே வாங்க பாஜக அரசு ஒப்பபந்தம் செய்துள்ளது. விலை மலிவு என்றால் கூடுதல் விமானங்களை வாங்க வேண்டியது தானே. அப்படியானால் தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்கிறீர்களா’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x