Last Updated : 02 Sep, 2018 01:38 PM

 

Published : 02 Sep 2018 01:38 PM
Last Updated : 02 Sep 2018 01:38 PM

மந்திரம் ஓதி ஹனுமரை வணங்குங்கள்: குரங்குகள் தொல்லைக்கு யோகி ஆதித்யநாத் புது யோசனை

உ.பி.யில் குரங்குகள் தரும் தொல்லைகளைச் சமாளிக்க அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு புதிய யோசனை தெரிவித்துள்ளார். ஹனுமரை வணங்கி அவர் மந்திரத்தை ஓதும்படி அதில் கூறியுள்ளார்.

பாஜக ஆளும் மாநிலமான உ.பி.யின் முதல்வராக இருக்கும் சாது, யோகி அதித்யநாத். கோரக்பூரின் பிரபல கோரக்நாத் மடத்தின் அதிபதியுமான இவர் நேற்று முன்தினம் மதுராவின் பிருந்தாவன் சென்றிருந்தார்.

அங்கு உ.பி. சுற்றுலாத் துறை சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அப்போது மதுராவாசிகள் அங்கு குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாகப் புகார் தெரிவித்தனர். இதைக் கேட்ட யோகி அவர்களிடம் ஒரு புதிய யோசனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் யோகி கூறும்போது, ''பஜ்ரங்பலியை (ஹனுமர்) அன்றாடம் வணங்கி அவர் மீதான மந்திரத்தை ஓதுங்கள். குரங்குகள் உங்களுக்கு என்றுமே தொல்லை தராது'' எனத் தெரிவித்தார்.

யோகி மடியில் அமர்ந்த குரங்குகள்

தனக்கும் குரங்குகளுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்தையும் யோகி பகிர்ந்து கொண்டார். அதில் அவர், தாம் மடாதிபதியாக இருக்கும் கோரக்நாத் கோயிலிலும் குரங்குகள் வருவதாகவும், அவை தனது மடியில் அமர்ந்து தாம் கொடுப்பதை உண்டு மகிழ்ந்து சென்றுவிடுவதாகவும் கூறி உள்ளார்.

மதுராவில் உ.பி. அரசு சார்பில் ரூபாய் 350 கோடிக்கான நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார். அதில், பிருந்தாவனில் 10 ஏக்கர் நிலம் விலங்குகளுக்காக ஒதுக்குவதாகவும் அறிவித்தார். இவை பசு மாடுகள் மற்றும் குரங்குகளின் புகலிடமாக அமைய உள்ளது.

குரங்குகளால் அதிகரிக்கும் விபத்துகள்

உ.பி.யின் தெய்வீக இரட்டை நகரமான மதுரா மற்றும் பிருந்தாவனில் குரங்குகள் பக்தர்களுக்குத் தரும் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இதனால், அன்றாடம் குரங்குகளால் நடைபெறும் சிறிய, பெரிய விபத்துகளும் ஐம்பதைத் தாண்டியுள்ளது.

மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கும் குரங்குகள்

குறிப்பாக பிருந்தாவனில் உள்ள ஒரு கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் மூக்குக் கண்ணாடியை குரங்குகள் பிடுங்கிக் கொள்ளும் வழக்கம் உள்ளது. இதைப் பணயமாக வைத்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாவாசிகளிடம் உணவைப் பெற்றுக் கொள்கிறது. இதனால், அங்கு வருபவர்கள் தம் மூக்குக் கண்ணாடிகளை பத்திரப்படுத்தும்படி எச்சரிக்கப்படுவது உண்டு.

குடியரசுத் தலைவராக இருந்த போது பிரணாப் முகர்ஜியும் இங்கு ஒருமுறை செல்ல வேண்டி இருந்தது. இவரது மூக்குக் கண்ணாடியையும் குரங்குகள் பறித்து விடக் கூடாது என பாதுகாப்புப் படையினர் ஒரு யுக்தியை கையாண்டனர்.

அதில், குரங்குகளை விரட்ட லங்கூர் எனப்படும் கருங்குரங்குகளைக் கொண்டு வந்து விரட்டினர். இதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x