Published : 21 Sep 2018 06:00 PM
Last Updated : 21 Sep 2018 06:00 PM

மணியடித்து தகவல் பரிமாறும் மக்கள்: செல்போன், மின்சார வசதி இல்லாமல் தனித்துவிடப்பட்ட கிராமம்

கர்ப்பிணிகளை, நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 8 முறை மணியடித்தல், இறப்புச் செய்தியை தெரிவிக்க 2 முறை மணியடித்தல். இப்படி ஒவ்வொரு செய்தியையும் மணி அடித்தல் மூலமே ஓடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் பகிர்ந்து கொள்கிறார்கள்

மத்திய அரசு அனைத்துக் கிராமங்களுக்கும் சாலைவசதி, மின்வசதி செய்து கொடுக்கப்பட்டு வருவதாக கூறிவருகிறது. ஆனால், ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமத்தில் இன்னும் மின்வசதி, செல்போன் வசதி என ஏதுவுமே இன்னும் கிடைக்கவில்லை.

கந்தமால் மாவட்டம், தஜுங்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் பாசா. தாரிங்பாதி நகரில் இருந்து 35 கி.மீ மலைப்பகுதியில் உள்ளது. அடர்ந்த மரங்கள் கொண்ட மலைப்பகுதியில் பாசா கிராமம் இருப்பதால், இங்குப் போக்குவரத்து வசதிகள், மின்சாரம், செல்போன், மருத்துவ வசதி, பள்ளிக்கூடம் என எதுவுமே இல்லை.

இந்த பாசா கிராமத்துக்கு வர வேண்டுமானால், முறையான சாலைப்பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவு நடந்து தான் வர முடியும். இந்தக் கிராமத்துக்கு மின்வசதி கொடுப்பதற்காக டிரான்ஸ்பார்மர் கொண்டுவந்து வைக்கப்பட்டு 5 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்தவிதமான பணிகளையும் தொடங்கவில்லை.

இந்தப் பாசா கிராமத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 35 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்தக் குடும்பத்தினர் அனைவருக்கும் சில செய்திகளைத் தெரிவிக்க ஊருக்கு நடுவே ஒரு இரும்பு பிளேட் தொங்கவிடப்பட்டுள்ளது. இந்த இரும்பு பிளேட்டை(ராடு) அடித்து ஒலி எழுப்புவதன் மூலம் மக்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க முடியும்.

இது குறித்து கிராமத்தின் தலைவர் குமார் சுனம்ஜி கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஒரேமாதிரியான செய்தியை தெரிவிக்க இப்போது இந்த இரும்பு ராடை தட்டி ஒலிஎழுப்பித்தான் தெரிவிக்கிறோம்.

உதாரணமாக ஒரு நோயாளி அல்லது கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமானால், 8 முதல் 10 முறை மணி அடிப்போம். யாரேனும் ஊரில் காலமாகிவிட்டால் ஒரு முறை மட்டும் மணி அடிப்போம். இறுதிச்சடங்குக்கு அனைவரும் வரக்கோரி 2 முறை மணி அடிப்போம்.

கிராம சபைக்கான கூட்டம் நடத்த வேண்டுமானால், 5 முறை மணி அடிப்போம், இங்குள்ள சிறிய தேவாலயத்தில் அனைவருக்கும் பிரார்த்தனைக்கு வர வேண்டும் என்பதைத் தெரிவிக்க 3 முறை மணி அடிப்போம். இந்த மணியின் ஓசையைக் கேட்டு மக்கள் உடனடியாக வெளியேவந்து தகவலை அறிந்து கொள்வார்கள்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x