

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் வாழும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 50 விதவைகள், துர்கா பூஜையை காண்பதற்காக கொல்கத்தா செல்ல உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பொதுநல நிறுவனமான சுலாப் இன்டர்நேஷனல் செய்கிறது.
ஒவ்வொரு வருடமும் செட்பம்பரில் நடைபெறும் துர்கா பூஜை, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெங்காலிகளுக்கு மிகவும் முக்கியமான பண்டிகை ஆகும். இதையொட்டி கொல்கத்தாவில் நூற்றுக்கணக்கான பந்தல் களிட்டுக் கொண்டாடப்படும் இந்நிகழ்ச்சி, மிகவும் புகழ் பெற்றது. இதைக் காண உலகம் முழுவதிலும் வாழும் பெங்காலிகள் கொல்கத்தா வருவது வழக்கம். ஆனால், இந்த வாய்ப்பு தங்கள் குடும்பத்தினரால் கைவிடப்பட்டு மதுராவில் வாழும் விதவைகளுக்கு மட்டும் கிடைப்பதில்லை. ஆகவே, இந்த வருடம் சுமார் 50 விதவைகளுக்கு அந்த வாய்ப்பை நாடு முழுவதும் இலவச கழிப்பறைகள் கட்டும் பணியில் ஈடுபட்டு வரும் பொதுநல நிறுவனமான சுலாப் இன்டர்நேஷனல் ஏற்படுத்தித் தர உள்ளது.
இது குறித்து ‘தி இந்து’விடம் அந்நிறுவனத்தின் தலைவரான டாக்டர்.பிந்தேஷ்வர் பாதக் கூறும்போது, “விதவைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும் பொருட்டு இந்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இது வெறும் ஒரு பூஜைக்கான சுற்றுலாவாக மட்டுமன்றி, தம் மூதாதையர்களை காணவும், தாம் வாழ்ந்த இடத்தை நினைவுகூரவும் வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுகிறேன்’’ எனத் தெரிவித்தார்.
இந்த இலவச பயணத்தில் 80 வயதுக்கும் மேலான விதவைகள் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதாகவும், இதில் மதுராவில் 45 வருடங்களாக வாழ்ந்து வரும் 95 வயது கனக்லதா தேவி, மேற்கு வங்க முதல்வர் மற்றும் ஆளுநரைக் காண விரும்புவதால் அதற்காக அவர்களிடம் நேரம் கோரப்பட்டுள்ளதாகவும் பாதக் கூறினார்.
செப்டம்பர் 25-ம் தேதி கொல்கத்தா ரயில் நிலையத்தில் இறங்க உள்ள விதவைகளுக்கு ஒரு டன் பூக்களால் சிறப்பான வரவேற்பு அளிக்க சுலாப் ஏற்பாடு செய்துள்ளது. பிறகு இவர்கள் காளி கோயிலில் சிறப்பு பூஜை செய்வதுடன் பழம்பெரும் போக்குவரத்தான டிராம், மற்றும் படகில் ஏறி ஹுக்லி அருகே கங்கை ஆற்றை கடக்க உள்ளனர்.
கிருஷ்ணஜென்ம பூமி எனப்படும் மதுராவில் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான விதவைகள் வாழ்ந்து வருகின்ற னர். இங்கு கொண்டு வந்து விடப்படுபவர்கள் தம் உண விற்காக படும் அவதியை அவர்களின் குடும்பத்தார் கூட கண்டு கொள்வதில்லை. இவர்கள் அவலநிலை பற்றி சில வருடங்களுக்கு முன்பு செய்திகளில் வெளியான பின், சுலாப் இண்டர்நேஷனல் நிறுவனம் ஆயிரம் விதவைகளுக்கு, ஆசிரமம் அமைத்து ஆதர வளித்து வருகிறது. தீவிர கிருஷ்ண பக்தைகளான அந்த விதவைகளுக்கு முதல்முறையாக ஜென்மாஷ்டமி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளவும் வாய்ப்பளிக் கப்பட்டுள்ளது.