Published : 15 Sep 2018 04:10 PM
Last Updated : 15 Sep 2018 04:10 PM

பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரி புகைப்படத்தை வெளியிட்ட ஜீசஸ் சபை: கேரள போலீஸார் வழக்கு

கேரளாவில் பிஷ்ப் மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்ட மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப் ஆக பணியாற்றி வந்தவர் பிராங்கோ முலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்ட யத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்கார புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் பலமுறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.

இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.

மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து பேராயர் பிராங்கோ மூலக்கல்லுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

அதில் 19–ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து விசாரணைக்கு ஏதுவாக பிஷப் பதவி விலகியுள்ளார். தனது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜலந்தரில் இருக்கும் மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை, பிஷப் மீது பாலியல் புகார் தெரிவித்த கன்னியாஸ்திரியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பிஷ்ப் மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், அதில் கன்னியாஸ்திரி மேலும் 9 பேருடன் இணைந்து பிஷப்புக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் புகார் கூறியவர்களின் புகைப்படத்தை வெளியிடக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், அதை மீறி வெளியிட்ட மிஷினரிஸ் ஆப் ஜீசஸ் சபை மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். புகார் கூறி கன்னியாஸ்திரி, பிஷப் பிராங்கோவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அந்த புகைபடத்தில் இருவரும் சகஜமாக இருப்பது போன்று உள்ளது.

பல நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்று இருப்பதாகவும், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி இருந்தால் இப்படி நடக்க வாய்ப்பில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.

இது விதிமுறை மீறல் என்பதால் கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x