Last Updated : 19 Sep, 2018 09:55 PM

 

Published : 19 Sep 2018 09:55 PM
Last Updated : 19 Sep 2018 09:55 PM

‘பசு பாதுகாவலர்கள் மீது கால்நடை கடத்தல்காரர்கள் நடத்தும் தாக்குதலைப் பற்றி ஏன் பேசுவதில்லை?’- மோகன் பாகவத் கேள்வி

பசுவின் பெயரில் பல்வேறு வன்முறைகள் நடக்கின்றன. பசுபாதுகாவலர்கள் தாக்குகிறார்கள் என்று கூறும் சிலர், கால்நடை கடத்தல்கார்கள் பசு பாதுகாவலர்கள் மீது நடத்தும் தாக்குதலைப் பற்றி ஏன் பேசுவதில்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3-நாள் மாநாடு டெல்லியில் நடந்தது. இந்த மாநாட்டின் நிறைவு நாளான இன்று அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் நிருபர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அப்போது பசு பாதுகாவலர்கள் பெயரில் நடக்கும் வன்முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு மோகன் பாகவத் அளித்த பதில்:

பசுவின் பெயரில் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடக்கின்றன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடக்கும் தாக்குதல்களை சிலர் பெரிதாக்குகிறார்கள். இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கிறார்கள்.

பசு பாதுகாவலர்கள் தாக்குதலை மட்டும் பெரிதாக்கும் சிலர், கால் நடை கடத்தல்காரர்கள், பசு பாதுகாவலர்கள் மீது நடத்தும் தாக்குதல் குறித்து ஏன் பேசுவதில்லை?

பசு பாதுகாவலர்கள் உண்மையாகவே பசுவுக்கான சேவையில் ஈடுபடுகிறவர்கள். முஸ்லிம்கள் கூட பசுவுக்கான குடில் அமைத்துப் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களை இந்தச் சம்பவங்களோடு தொடர்புப் படுத்தக்கூடாது. இந்த இரட்டை நிலைப்பாட்டை நாம் ஒழிக்க வேண்டும்.

சட்டத்தை மதிக்காமல் சட்டத்தை கையில் எடுத்துச் செயல்படுவது தவறானது. அது முறையற்றது, அவ்வாறு ஈடுபடுகிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துத் தண்டிக்க வேண்டும். அதேசமயம், பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பசுக்கள் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டும். இது அரசியலமைப்புக் கொள்கையில் இருக்கிறது. ஆதலால் அதன்படி நாம் செயல்பட வேண்டும். ஆனால், பசுபாதுகாப்பு என்பதைச் சட்டத்தின் மூலமாக மட்டும் நாம் செயல்படுத்த முடியாது. பசு பாதுகாவலர்களும் பசுக்களைக் கண்டிப்பாக பாதுகாக்க வேண்டும். அவர்களும் பசுக்களை சுதந்திரமாக அலையவிட்டுவிட்டால், அது பல்வேறு தொந்தரவுகளுக்கு இட்டுச் செல்லும். அதன்பின் பசு பாதுகாப்பு குறித்த நம்பிக்கையில் கேள்வி எழுப்பப்படும். ஆதலால், பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

பசுக்களுக்குச் சேவை செய்வதன் மூலம் குற்றம் செய்யும் மனநிலை குறையும். பசுக்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது நாட்டில் பல்வேறு பகுதிகளில் மக்கள் நல்ல முறையில் கோசாலைகளை அமைத்துப் பராமரித்து வருகிறார்கள். அதில் முஸ்லிம்களும் கூட ஈடுபட்டு வருகிறார்கள். ஒட்டுமொத்த ஜெயின் சமூகத்தாரும் பசு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆதலால், அவர்களை கும்பலாகத் தாக்கும் சம்பவங்களோடு இவர்களை தொடர்புப்படுத்தக் கூடாது.

இவ்வாறு மோகன் பாகவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x