Published : 21 Sep 2014 12:25 pm

Updated : 21 Sep 2014 12:25 pm

 

Published : 21 Sep 2014 12:25 PM
Last Updated : 21 Sep 2014 12:25 PM

வணிக நூலகம்: சின்ன சின்ன வேலைகள்; பெரிய பெரிய வெற்றிகள்

சின்ன மீனை போட்டால் பெரிய மீனை பிடிக்கலாம் கீழே கிடந்தால் செங்கற்கள்; எடுத்து அழகாக அடுக்கினால் சுவர். சின்ன சின்ன வேலைகளை சேர்த்து செய்தால் அருமையான கட்டிடம். மேலே சொன்ன வார்த்தைகளுக்கும் வாழ்க்கைக்கும் பெரிய தொடர்பு இருக்கிறது. சிறிய செயல்களை சரி வர செய்தால் பெரிய செயல்கள் தானே நேரும் என்ற கொள்கையின் அடிப்படையில் டான் காபோர் எழுதிய புத்தகம் இது.

சிறிய மாற்றங்களை ஏற்படுத்தி கொள்வதற்கு முதலில் மனதளவில் விருப்பம் இருக்க வேண்டும். ஒரு நிகழ்வை நீங்களே நினைத்து பாருங்கள். ஒரு கூட்டத்தில் அல்லது ஒரு வகுப்பில் நீங்கள் சென்று அமர்ந்த பிறகு உங்களை யாராவது வேறு இடத்துக்கு மாறி உட்காரும்படி சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?. இதே நிகழ்வை நான் ஒரு வகுப்பில் கூறிய பொழுது பாதிக்கு மேற்பட்டவர்கள் மிகவும் அமைதி இழந்து எதற்காக மாற வேண்டும். நான்தான் இங்கேயே உட்கார்ந்து இருக்கிறேனே, வசதியாக இருக்கும் இடத்தை விட்டு விட்டு எதற்காக வேறு இடம் போக வேண்டும்? அருகாமையில் உள்ள நண்பர்களை விட்டு விட்டு எதற்காக தெரியாத இடத்தில் உட்கார வேண்டும்? என்று கேள்விகள் எழுப்பினார்கள்.

கட்டாயமாக இடம் மாற வேண்டும் என்று கூறும்பொழுது பெரும்பான்மையானவர்கள் இடம் மாற தயாராக இருந்தாலும் பக்கத்திலே இருக்கும் இடத்திற்கு மாறுவதற்கே பெரிதும் விரும்புவதாக கூறினார்கள். ஆக ஒரு சிறிய இட மாற்றத்துக்கு தற்காலிகமாக உட்கார கூடிய இடத்துக்கு இவ்வளவு யோசனைகள் இருந்தால், இவ்வளவு எதிர்ப்புகளும் மறுப்புகளும் தெரிவிப்பவர்களாக இருந்தால் அவர்கள் எவ்வாறு முன்னேற்றத்திற்கான மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுவார்கள்?.

அர்ப்பணிப்பு உணர்வு+ சரியான திட்டமிடுதல்+ முறையான செயல்பாடுகள்+ விடாமுயற்சி =

கனவு வசப்படுதல்

இந்த ஐந்து வழிகளையும் முறையாக கையாண்டால் எவ்வாறு வெற்றி அடையலாம் என்பதை நூலாசிரியர் விரிவாகவும், தெளிவாகவும் எடுத்து கூறியுள்ளார்.

சிலர் கனவு மெய்ப்படுதல் என்றால் ஏதோ ஒரு நிகழ்வை கனவாக காண்பது என்ற தவறான எண்ணம் கொள்கிறார்கள. மாறாக கனவு மெய்ப்படுவது என்பது எண்ணியதை அடைதல் அல்லது முடித்தல் என்பதே ஆகும்.

பில் மாரியட் என்ற ஓட்டல் முதலாளி உலகெங்கும் ஓட்டல்களை தொடங்குவதற்கு கனவு கண்டார். அந்த கனவிற்கு வடிவம் கொடுக்க மூன்று பொதுவான வழிகளைத் தேர்ந்தெடுத்தார்:

* விருந்தினர்களுக்கு முகம் மலர்ந்த மற்றும் மனம் நிறைந்த சேவை.

* தரமான உணவை நியாயமான விலையில் வழங்குதல்.

* இரவு பகலாக உழைத்து லாபம் ஈட்டுதல்.

இவற்றை சரியான முறையில் பின்பற்றியதால் இன்று மேரியட் ஓட்டல் என்ற பன்னாட்டு ஓட்டல் பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

எவ்வாறு நீண்ட கால இலக்குகளை அடைவது என்பது நிறைய பேருக்கு புதிராக இருக்கும். இது போன்ற நேரங்களில் முடிவெடுக்கும்போது மற்றவர்கள் எதை மிக சரியானது என தீர்மானிக்கிறார்களோ அதை தேர்ந்தெடுப்பதை விட அவரவருக்கு எது சரியானது என முடிவு செய்வதே மிகச் சரியானதாகும். எல்லோரும் ஒரே இசையை கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மட்டும் வித்தியாசமான தாளக்கட்டை நுணுகிப்பார்ப்பது என்பது கூட்டத்திலிருந்து மற்றவர்களின் கருத்துக்கு மாறாக சிந்திப்பதற்கு ஒப்பாகும்.

தொலைநோக்கு இலக்குகளை அடைய இவை மிகவும் தேவை. அதேபோல, நேர்மறையான மனப்பாங்கு முடியாது என்பதை முடித்துக்காட்டலாம் என்று மாற்றிக்காட்டும்.

வேலையை எதிர்பார்த்து பொழுதை போக்கி கொண்டிருந்த பொறியாளர் சார்லஸ் டாரோ (Charles Darrow) ஒரு விளையாட்டை உருவாக்கி அதற்கு மோனோ போலி (Mono Poly)என்று பெயரிட்டு ஒரு விளையாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். இருபது ஆயிரம் விளையாட்டு அட்டைகள் ஒவ்வொரு வாரமும் விற்கப்பட்டு கோடீஸ்வரன் ஆனார். உலகின் மிக அதிகமான அளவில் விற்பனையான இரண்டு விளையாட்டுகளை மோனோபோலி மற்றும் ஸ்கிரேபிள் (Scarrabble) என்று கூறுவர்.

சரியான நேரத்தில் வித்தியாசமான அணுகுமுறையில் மற்றவர்களின் எண்ண ஓட்டத்தினை புரிந்துகொண்டு தன்னுடைய பொருளை விற்று முதலாக்கியது சரியான திட்டமிடுதல் என்பதற்கு பொருத்தமான உதாரணமாகும். ஒரு ரோமானிய தத்துவஞானி கூறியதை போல நமது திட்டங்கள் சரியான குறிக்கோள் இல்லாவிடில் திசைமாறக்கூடும். எந்த துறைமுகத்தை சென்று சேர வேண்டும் என்ற தீர்மானம் இல்லாதவர்கள் எந்த காற்றையும் தவறான காற்றாக கொண்டு தவறான இலக்கை அடைவார்கள். எனவே, குறிக்கோள்களை அடைய சரியான இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்.

விடாமுயற்சி என்பது எப்பொழுதும் வெற்றி அடைந்துகொண்டே இருப்பது என்பது அல்ல. மாறாக தோல்வியில் துவளாமல் தோல்விகளை வெற்றிக்கு அடித்தளமாக அமைத்துக்கொள்வதே ஆகும். சார்லஸ் குட் இயர் என்பவர் எதிர்பாராத விதமாக கந்தகமும், ரப்பரும் கொதிக்கும் அடுப்பில் விழுந்ததில் பல கோடி டாலர்களுக்கு சொந்தக்காரர் ஆனார். தவறை சரியாக ஆக்கிய வித்தையை அவர் மட்டும் அல்ல பக் மினிஸ்டர் புல்லர் என்ற பூகோள வரைபட அலகை கண்டுபிடித்தவரும்; தன்னுடைய தவறுகளில் இருந்தே பாடம் கற்றுக்கொண்டதாக தெரிவிக்கிறார்.

ஜார்ஜ்; பெர்னாட்ஷா கூறியதை போல வாழ்க்கையில் ஏதும் செய்யாதது என்பதை விட தவறு செய்து அறிந்துகொள்வது மதிப்புமிக்கது என்ற கூற்று ஏற்புடையதாகும்.

விடாமுயற்சிக்கு உதாரணமாக இந் நிகழ்வை சொல்லலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காகிதங்களை குத்துவதற்கான பின்னை தேடிக்கொண்டிந்தார். அவர் உதவியாளரும் தொடர்ந்து தேடினார். ஒரே ஒரு வளைந்த பின் கிடைத்தது. அந்த பின்னை எவ்வாறு நேர்செய்யலாம் எதைக்கொண்டு நேர் செய்யலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் பக்கத்து மேசையின் மீது இருந்த ஒரு பெரிய பெட்டியில் உள்ள பேப்பர் கிளிப்புகளை பார்த்தனர்.

உடனே உதவியாளர் ஆகா நமக்கு நிறைய கிளிப்புகள் கிடைத்துவிட்டன என்ற சந்தோஷத்தோடு அதை எடுத்து ஐன்ஸ்டீனிடம் கொடுத்தார். ஆனால், ஐன்ஸ்டீனோ அந்த பழைய கிளிப்பை எவ்வாறு சரிசெய்வது என்பது குறித்து ஆய்வு செய்துகொண் டிருந்தார். அவரிடம் உதவியாளர் ஏன் இந்த கிளிப்புகளை உபயோகிக்ககூடாது என்றதற்கு, ஒரு இலக்கை அடைய வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்கள் அதிலிருந்து விலகுவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அதே போல நானும் இந்த கிளிப்பை எவ்வாறு நேர்செய்யலாம் என்ற குறிக்கோளில் இருந்து நிறைய பின்கள் கிடைத்துவிட்டன என்ற மகிழ்ச்சியில் அதை தவறவிடமாட்டேன் என்று பதில் கூறினார்.

சிறு செயல்கள் எவ்வாறு பெரிய வெற்றியை அடைய உதவும் என்பதை உணர்த்தும் சில உதாரணங்கள் மேலே கொடுக்கப்பட்டிருக்கின்றன. யார் ஒருவர் சரியான முறையில் சிறிய செயல்களை சீரிய முறையில் செய்து பெரிய வெற்றியை எதிர்கொள்கிறார்களோ அவர்களுக்கு இந்த புத்தகம் சரியான இலக்கைக் காட்டும்.

rvenkatapathy@rediffmail.com

வணிக நூலகம்புத்தக விமர்சனம்Big things happen

You May Like

More From This Category

More From this Author