Published : 09 Sep 2018 08:35 AM
Last Updated : 09 Sep 2018 08:35 AM

வருமான வரித்துறை மூலம் பாஜக மிரட்டுகிறது: கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் குற்றச்சாட்டு

வருமான வரித்துறை பதிவு செய்துள்ள வழக்கில் தான் கைது செய்யப்பட‌ இருப்பதாக வெளியான தகவலை கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் மறுத்துள்ளார்.

கர்நாடக அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான‌ டி.கே.சிவகுமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் வீட்டில் வருமான வரித்துறை கடந்த ஆண்டு சோதனை நடத்தியது. 60-க்கும் மேற்பட்ட இடங்களில் 4 நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் விசாரணை நிறைவடைந்துள்ளதால் சிவ குமார் உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்ய உள்ளது. இதற்காக வருமான வரி மற்றும் அமலாக்க‌த்துறை அதிகாரிகள் பெங்களூருவில் முகாமிட்டுள்ளனர். வழக்குப்பதிவு செய்யப்பட்ட உடன் சிவகுமார் கைது செய்யப்பட இருப்பதாக நேற்று தகவல் வெளியானதால் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து டி.கே.சிவகுமார் கூறுகையில், ‘‘மத்தியில் ஆளும் பாஜக அரசு, வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை கையில் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சியினரை மிரட்டி வருகிறது. காங்கிரஸாரின் வீடுகளின் சோதனை நடத்தும் இந்த அதிகாரிகள் பாஜகவினரின் வீட்டுக்கு போகவே மாட்டார்கள். வருமான வரித்துறை விவ காரத்தை சட்டப்படி எதிர்கொண்டு வருகிறேன். பாஜகவின் இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட் டேன். நான் கைதாவதாக பரவி யுள்ள செய்தி தவறானது''என்றார்.

கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், '' கர்நாடகாவில் காங்கிரஸ் எம் எல் ஏக்களிடம் பாஜக குதிரை பேரம் நடத்திய போது அதனை தடுத்தவர் டி.கே.சிவகுமார். கர்நாடக அரசு என் தலைமையில் கவிழாமல் சிறப்பாக செயல்பட அவர் பக்கப்பலமாக இருக்கிறார். அவரை பழிவாங்கும் நோக்கத்தோடு பாஜக செயல்படுகிறது. கர்நாடக அரசை பாஜக கவிழ்த்தால் பெரும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்''என எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x