Published : 11 Sep 2018 08:44 AM
Last Updated : 11 Sep 2018 08:44 AM

கேரள வெள்ளத்தில் சிக்கிய பெண் படகில் ஏற முதுகை படியாக்கி உதவி செய்த மீனவருக்கு கார் பரிசளிப்பு

கேரள வெள்ளத்தில் சிக்கிய பெண் படகில் ஏவுவதற்கு தன் முதுகையே படியாக்கி உதவிய மீனவருக்கு கார் பரிசளிக்கப் பட்டுள்ளது.

கேரளாவில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் 400-க்கும் மேற்பட்டவர்கள் பலி யாயினர். பல வீடுகள், கட்டிடங் கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் போது தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் துரிதமாக செயல்பட்டு பலரை உயிருடன் மீட்டனர். எனினும் சில இடங்களில் சிக்கியவர்களை மீட்க முடியவில்லை.

அந்த நேரத்தில் கேரள மீனவர் கள் உதவிக்கரம் நீட்டினர். தங்க ளுடைய படகுகளுடன் கிளம்பிய மீனவர்கள், வெள்ளத்தில் சிக்கிய பலரை மீட்டனர். அப்படி ஓரிடத்தில் சிக்கிய பெண்கள் சிலரை மீட்க மீனவர்கள் சென்றனர். அங்கு படகில் ஏற முடியாமல் பெண்கள் தவித்தனர். அப்போது, மீனவர் ஜெய்சால் என்பவர் கீழே குனிந்து தனது முதுகை படியாக பயன்படுத்தி படகில் ஏறுமாறு கூறினார். அதன்படி அவரது முதுகில் கால் வைத்து படகில் பெண்கள் ஏறினர். அதை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலை தளங்களில் வெளியிட்டார். அந்தப் படம் வைரலானது. அத்துடன் ஜெய்சாலுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்தன.

இந்நிலையில், அவரது தன்னலமற்ற சேவையைப் பாராட்டி மஹிந்திரா நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள ‘மராஸ்ஸோ’ ரக கார் ஒன்று பரிசளிக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ என்ற பெயரில் புதிய எஸ்யூவி ரக காரை அறிமுகப் படுத்தி உள்ளது. கேரளாவில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த எர்ரம் மோட்டார்ஸ் என்ற நிறுவனம் (டீலர்), இந்தக் காரின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது. மராஸ்ஸோ ரக முதல் கார் விநியோகத்துக்காக வந்த போது, அதை எர்ரம் நிறுவனம் மீனவர் ஜெய்சாலுக்குப் பரிசாக வழங்கி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், கார் சாவியை ஜெய்சாலிடம் கேரள அமைச்சர் டி.பி.ராமகிருஷ்ணன் வழங்கினார். அப்போது, எர்ரம் நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் உடனடிருந்தனர். இதுகுறித்து ஜெய்சால் கூறும்போது, ‘‘நான் எந்த நினைப்பும் இல்லாமல்தான் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டேன். அதனால் எனக்கு புகழ், பாராட்டு, பரிசு கிடைக்கும் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை’’ என்றார்.

ஜெய்சால் மேலும் கூறும் போது, ‘‘இந்த கார் மூலம் வரும் காலங்களில் இன்னும் அதிகமான மக்களுக்கு என்னால் உதவ முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x