Published : 18 Sep 2018 12:18 PM
Last Updated : 18 Sep 2018 12:18 PM

படித்த எம்எல்ஏக்களைவிட படிக்காத எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் குஜராத்தில் மிக அதிகம்: ஒரு சுவாரஸ்ய ஆய்வு

கல்வியறிவு இல்லாத, படிப்பைப் பாதியில் விட்ட எம்எல்ஏக்கள் டிகிரி முடித்த, மேல்படிப்பு படித்தவர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அரசியல் செல்வாக்கு என்பது படிப்பை வைத்தா பணத்தை வைத்தா என்று கேட்டால் பணத்தை வைத்துதான் என்கிறது இந்த ஆய்வு.

தேர்தல் மறுசீரமைப்புக்காகப் பணியாற்றி வரும் ஒரு தன்னார்வ அமைப்பு மற்றும் ஜனநாயக மறுசீரமைப்பு (அசோஸியேஷன் பார் டெமாக்ரடிக் ரிபார்ம்ஸ்-ஏடிஆர்) சங்கம் ஓர் ஆய்வறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.

இதில் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 எம்எல்ஏக்களில் 161 எம்எல்ஏக்களின் சராசரி ஆண்டு வருமானம் தலா ரூ.18.80 லட்சம் எனவும், இந்த 161 எம்எல்ஏக்களும் கல்வியறிவு பெறாத, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

182 எம்எல்ஏக்களில் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் வருட வருமானம் பற்றிய விவரங்களை சரியாகக் குறிப்பிடாதவர்களின் பட்டியலையும் ஏடிஆர் வெளியிட்டுள்ளது. அதில் சுயேச்சை எம்எல்ஏவான ஜிக்னேஷ் மேவானி உள்ளிட்ட 21 எம்எல்ஏக்கள் தங்களின் வருட வருமானம் பற்றித் தெளிவாக எதையும் குறிப்பிடவில்லை.

மீதமுள்ள 161 எம்எல்ஏக்களின் பிரமாணப் பத்திரங்களின்படி அதில் உள்ள விவரங்களை ஆய்வுக்குட்படுத்திய வகையில் அவர்கள் ஒவ்வொருவரின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.18.80 லட்சம் என்று மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் எம்எல்ஏக்களில் அதிக வருமானத்தைக் குறிப்பிட்டுள்ளவர் வத்வான் தொகுதியைச் சேர்ந்த தான்ஜிபாய் பட்டேல். பாஜக எம்எல்ஏவான இவரது ஆண்டு வருமானம் ரூ.3.90 கோடி. மிகவும் குறைவான வருமானத்தைக் குறிப்பிட்டுள்ளவர் வதோதரா சட்டப்பேரவைத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ சீமாபென். இவரது ஆண்டு வருமானம் 69 ஆயிரத்து 340 ரூபாய்.

இந்த 161 எம்எல்ஏக்களில் 33 பேர் தொழில் என்ற இடத்தில் வர்த்தகம் என்று குறிப்பிட்டுள்ளனர். 56 எம்எல்ஏக்கள் விவசாயத்தைத் தங்கள் தொழிலாகக் குறிப்பிட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் ரியல் எஸ்டேட், சமூக சேவை போன்ற பல வேலைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்கள்.

63 பட்டதாரி எம்எல்ஏக்களின் சராசரி வருமானம் தலா ரூ.14.37 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை கல்வித் தகுதி முழுமைபெறாத 85 எம்எல்ஏக்களின் சராசரி வருமானம் தலா ரூ.19.83 லட்சம்.

இதில் சுவாரஸ்யம் என்னவெனில் கல்வியறிவு பெறாத 4 எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் தலா ரூ.74.17 லட்சம், இது உயர் படிப்பு படித்தவர்கள் தங்கள் வருமானம் என்று குறிப்பிட்டுள்ளதை விட அதிகமாகும்.

ஏடிஆர் வெளியிட்டுள்ள விவரங்களை, குஜராத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு சரிபார்த்து ஆய்வை அங்கீகரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x