Published : 26 Sep 2018 11:36 AM
Last Updated : 26 Sep 2018 11:36 AM

அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும்; தனியார் நிறுவனங்களுக்கு தகவல்கள் தரக்கூடாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அரசியல் சட்டப்படி ஆதார் செல்லும் உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது, அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய அரசு சார்பில் அமல்படுத்தப்படும் சமூக நலத் திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் சேவைகளைப் பெற ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும் ஆதார் திட்டம் மற்றும் ஆதார் சட்டம் 2016-ஐ எதிர்த்தும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தனிநபர் சுதந்திரம் அடிப்படை உரிமைதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், ஆதார் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரர்கள் தரப்பில் கோரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. இந்தமர்வில் நீதிபதிகள் ஏ.கே சிக்ரி, ஏ.எம். கன்வில்கர், டி.ஓய். சந்திரசூட் மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

5 நீதிபதிகள் அமர்வு விசாரணை தொடங்கியபோது, கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதிக்குள் அனைத்து சேவைகளும் பெற ஆதார் எண்ணை கட்டாயம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அந்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

வழக்கின் விசாரணை கடந்த மே மாதம் முடித்து தீர்ப்பை ஒத்திவைத்த நீதிபதிகள் இறுதி தீர்ப்பு வரும் வரை வங்கி, தொலைபேசி சேவை உள்பட எதற்கும் ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்று இடைக் கால தடை விதித்தனர். இந்த நிலையில் நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பு வழங்கினர். அதில் அவரகள் கூறியதாவது:

அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான். ஆதார் எண்ணை போலியாக உரு/வாக்க முடியாது. அதேசமயம் மக்களின் தனிப்பட்ட தகவல்களை உரியமுறையில் பாதுக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. அதற்கு ஏற்றவகையில் ஆதார் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.

தனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தகவல்களை தருவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே ஆதார் சட்டத்தின் 57-வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது. அதுபோலவே ஆதார் எண் இல்லை என்பதற்காக தனிநபர்களுக்கு அரசின் சலுகைகள், உதவிகள் கிடைக்காமல் தடுத்து நிறுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. வங்கிகள், மொபைல் இணைப்பு பெற ஆதார் தேவை என கட்டாயப்படுத்தக்கூடாது. அதேசமயம் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கும் உத்தரவு சரியானதே’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x