

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இரண்டு பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்டனை விவரங்கள் திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் லும்பினி பூங்கா மற்றும் கோகுல் சாட் ஆகிய பகுதிகளில் 2007-ம் ஆண்டு அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இதில் 44 பேர் உயிரிழந்தனர். 68 பேர் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தில் முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அக்பர் இஸ்மாயில் செளதரி மற்றும் அனிக் ஷபீக் சயீது ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொகமது சாதிக் அகமது ஷேக், ஃபரூக் மற்றும் தாரிக் அஞ்சும் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தீர்ப்பை இரண்டாவது கூடுதல் பெருநகர நீதிபதி ஸ்ரீனிவாஸ் ராவ் வாசித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக செர்லப்பள்ளி மத்திய சிறையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்திய முகாஜிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 25, 2007-ல் ஹைதராபாத்தில் மூன்று வெடிகுண்டுகளை வைத்தனர். இதில் இரண்டு வெடிகுண்டுகள் அடுத்தடுத்து வெடிக்க, வெடிக்காத குண்டை தில்சுக்நகர் மேம்பால நடைபாதையில் காவல்துறையினர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.