Last Updated : 28 Sep, 2018 02:52 PM

 

Published : 28 Sep 2018 02:52 PM
Last Updated : 28 Sep 2018 02:52 PM

‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கென பாரம்பரியம் இருக்கிறது, மறந்துவிடாதீர்கள்’: தந்திரி, பந்தளம் அரச குடும்பத்தினர் அதிருப்தி

சபரிமலை கோயிலுக்கென தனிப் பாரம்பரியம் இருக்கிறது அதை யாரும் மறந்துவிடக்கூடாது என்று சபரிமலைக் கோயில் தலைமைத் தந்திரியும், பந்தளம் அரச குடும்பத்தினரும் கூறியுள்ளனர்.

சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுடைய பெண்கள் வழிபாடு நடத்த காலங்காலமாக தடை இருந்துவருகிறது. இதை எதிர்த்துக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் .எப் நாரிமன், ஏஎம். கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண், பெண் பாகுபாடு கிடையாது. அனைத்து வயதுப் பெண்களும் இங்கு வந்து வழிபாடு நடத்தலாம், அதில் தடையில்லை எனத் தீர்ப்பில் தெரிவித்தனர்.

நவம்பர் மாதம் சபரிமலை சீசன் தொடங்க இருக்கும் இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. இப்போது திடீரென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சபரிமலை கோயிலின் தலைமை தந்திரியையும், பந்தளம் அரச குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

சபரிமலை கோயிலின் தலைமை தந்திரி கே.ராஜீவரு கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம், சபரிமலைக் கோயிலின் பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பது எங்கள் விருப்பமாகும்.

இந்தத் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்வது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியம் ஆலோசனைக்குப் பின் முடிவு செய்யும். கார்த்திகை மாதம் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நாங்கள் எப்படி சமாளிக்கப் போகிறோம் எனத் தெரியவில்லை. இப்போதுவரை சபரிமலைக் கோயிலில் பெண்களுக்கென தனியாக எந்த வசதியும் இல்லை. இனிவரும் காலங்களில் திருவிதாங்கூர் அதற்கான பணிகளைச் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நகைகள் அனைத்தும் பந்தளம் அரச குடும்பத்தினர் வசம் இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து பந்தளம் அரச குடும்பத்தின் செய்தித்தொடர்பாளர் சசிகுமார் வர்மா கூறுகையில், சபரிமலையில் பெண்களும் வழிபாடு செய்ய வரலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வேதனை அளிக்கிறது.

இந்தத் தீர்ப்பினால் நூற்றாண்டுகாலமாக கோயிலில் பின்பற்றப்பட்டுவரும் பாரம்பரியங்கள் மாற்றப்பட்டுள்ளது வேதனையளிக்கிறது. ஒவ்வொரு மதவழிபாட்டுத் தலத்துக்கும் ஒவ்வொருவிதமான பழக்கங்கள், பாரம்பரியங்கள் இருக்கின்றன, இவற்றை தனிப்பட்ட காரணங்களுக்காகப் பின்பற்றுகிறார்கள்.

மசூதிகளிலும், தேவாலயங்களிலும் மக்கள் செருப்பு அணிந்து செல்கிறார்கள். அதேபோன்று கோயிலுக்குள் செல்ல முடியாது. அதுபோலத்தான் சபரிமலைக்கும் தனியாகப் பாரம்பரியங்கள் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் 41 நாட்கள் கடும் விரதம் இருத்து ஐயப்பனைக் காண வருகிறார்கள். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கென தனியாகப் பாரம்பரியம், பழக்கவழக்கங்கள் இருக்கிறது அதை மறந்துவிடக்கூடாது எனத் தெரிவித்தார்.

சபரிமலை சந்திரியின் குடும்ப உறுப்பினர் ராகுல் ஈஸ்வரன் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் நாங்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம். சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். பல்வேறு இந்து அமைப்புகள் ஒன்றாகச் சேர்ந்து சிறப்பு வழிபாடு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அக்டோபர் 16-ம் தேதிவரை சீராய்பு மனுத்தாக்கல் செய்யக் கால அவகாசம் இருக்கிறது. அனைத்துத் தரப்பினருடனும் ஆலோசனை நடத்தி சீராய்வு மனுத்தாக்கல் செய்வார்கள். எங்களைப் பொருத்தவரை இது சமநிலை நீதி என்று கூற முடியாது. அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25-யை மீறித் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x