Published : 17 Sep 2018 03:16 PM
Last Updated : 17 Sep 2018 03:16 PM

காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை எதிர்த்து பிரிவினைவாதிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு

காஷ்மீர் தீவிரவாதிகள் ஐந்துபேர் மற்றும் பொதுமக்களில் ஒருவரும் கடந்த சனிக்கிழமை அன்று கொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பிரிவினைவாதிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதற்கும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனால் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அன்று குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின்படி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சவ்காம் கிராமத்தில் ஐந்து தீவிரவாதிகளும் பொதுமக்களில் ஒருவரும் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.

இதனைக் கண்டித்து சையத் அலி ஜீலானி, மிர்விஸ் உமர் ஃபரூக் மற்றும் முஹம்மது யாசின் மாலிக் ஆகியோரின் தலைமையிலான பிரிவினைவாத குழுக்கள் இன்று வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன.

இதனால் காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் மற்றும் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் கடைகள், பொதுப் போக்குவரத்து, மற்ற வியாபாரத் தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

அரசுப் பேருந்துகள், வங்கிகள், தபால் நிலையங்களில் ஊழியர்களின் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டது. ஜம்மு மண்டலத்தின் பன்னிஹால் நகரம் மற்றும் மாநிலம் முழுவதற்குமான ரயில் போக்குவரத்துச் சேவைகளும் இன்று நிறுத்தப்பட்டன.

ஸ்ரீநகர் நகரம் மற்றும் மாநிலத்தின் முக்கிய இடங்களிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைப் பிரிவினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x