

கத்தார் நாட்டுக்கு பெருங்கனவுடன் வேலைக்குச் சென்ற தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வினோத் கன்னா (28) என்ற நபர் படாதபாடு பட்டு 9 மாத வேதனை நிரம்பிய, வலி நிறைந்த வாழ்க்கைக்குப் பிறகு இந்தியா திரும்பவும் படாதபாடு பட்டுள்ளார்.
தான் பட்ட வேதனை, துன்பம் எனது மோசமான எதிரிக்குக் கூடக் கிடைக்கக் கூடாது என்று தான் பிரார்த்திப்பதாகக் கூறும் வினோத் இனி ஒருநாளும் கல்ஃப் கனவுகளுடன் எதிர்காலத்தை நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் என்று சூளுரைத்துள்ளார். அங்கிருந்த 9 மாதகால அனுபவம் இப்போது நினைத்தாலும் என் முதுகுத் தண்டைச் சில்லிடச் செய்கிறது, அதன் நினைவைக்கூட நான் விரும்பவில்லை என்கிறார் வினோத்.
நிஜாமாபாத் மண்டலில் உள்ள ஸ்ரீநகர் என்ற ஊரைச் சேர்ந்தவர் வினோத். இவர் ஹைதராபாத் தரகர் எஸ்.தனுஞ்சய் ராவ் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் 2 ம் தேதி கத்தார் சென்றார். ராணுவத்தில் முடிவெட்டும் வேலை என்று கூறி இவர் அனுப்பப்பட்டார். ஆனால் அந்த வேலை இல்லை என்பது அங்கு இறங்கியபிறகுதான் தெரிந்தது.
ஆனால் இவரைப் பணிக்கு அமர்த்திய கத்தார் ராணுவத்துக்கு உணவு சப்ளை செய்யும் நிறுவனமான ஷேர்கா நிறுவனம் இழுத்து மூடப்பட்டதையடுத்து இவர் வாழ்க்கையும், கனவும் சுக்குநூறானது.
1.5 லட்சம் கொடுத்து இவர் கத்தார் ராணுவத்தில் பார்பர் வேலைக்காகச் சென்றார். கத்தார் தலைநகர் தோஹாவில் இவர் இறங்கியவுடன் இவரை 50 கிமீ தூரத்தில் உள்ள அபு-நா-காலாவுக்கு அனுப்பப்பட்டார், அங்கு போனால் அதிர்ச்சிக்காத்திருந்தது அங்கு இவருக்கு துப்புரவுப் பணியாளர் வேலையே காத்திருந்தது. இவரும் தலைவிதியை நொந்தபடி மாதச் சம்பளம் 1400 கத்தார் ரியால்களுக்கு வேலைக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் 3 மாதங்களுக்கு 1,100 ரியால்கள்தான் சம்பளம் வழங்கப்பட்டது.
நிறுவனம் மூடப்பட்ட பிறகு வினோத் வேலைக்காக கடுமையாக அலைந்துள்ளார், பார்க்காதவர்கள் இல்லை, பேசாதவர்கள் இல்லை ஆனால் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டார். இன்னொரு வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த ஏஜெண்ட் தொலைபேசியைத் துண்டித்தார். அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. விசாவும் காலாவதியாக முறையான ஆவணங்களும் வினோத்திடம் இல்லை. எந்த நிறுவனமும் இவரை பணிக்கு அமர்த்த முன்வரவில்லை.
“ஏஜெண்ட் என்னை கத்தார் ராணுவத்தில் முடிவெட்டும் வேலை 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்றுதான் அனுப்பினார். ஆனால் துப்புரவுப் பணி கொடுத்த நிறுவனம் திடீரென மூடப்பட்டது. 3 மாதங்களில் நடுத்தெருவுக்கு வந்து விட்டேன். தெரிந்தேதான் ஏஜெண்ட் இந்த வேலைக்கு அனுப்பினாரா என்று தெரியவில்லை. இப்போதைக்கு கத்தாரில் பல நிறுவனங்கள் இழுத்து மூடும் நிலையில் உள்ளன. சமீப காலங்களில் சுமார் 600 நிறுவனங்கள் மூடப்பட்டன” என்கிறார் வினோத்.
‘இந்தியத் தூதரகம் உதவி செய்யவில்லை’
“அங்கு பலரும் மவுனமாக இதே வேதனையைத்தான் அனுபவித்து வருகின்றனர். வேலையும் இல்லாமல், திரும்பி வரவும் முடியாமல் அல்லாடி வருகின்றனர். பல நாட்கள் சாப்பிடாமல் பார்க்கில் இரவுகளை தூக்கமின்றி கழித்திருக்கிறேன். இருமுறை என்ன செய்வதென்று தெரியாமல் திக்குத் தெரியாத ஊரில் வேலைக்காக சாலைகளில் அலைந்து கொண்டிருந்த போது இருமுறை போலீஸார் என்னைக் கைது செய்து பிறகு கருணையினால் விடுவித்தனர். இந்தியத் தூதரகம் எனக்கு உதவவில்லை” என்று கூறும்போது மனம் உடைந்து அழுதார்.
இவரது முதலாளி துருக்கியில் இருப்பதாகவும் தன்னால் அவரை நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது என்றும் கூறினார் வினோத். தெலுங்கு பேசும் சிலர் அங்கு இவருக்கு அவ்வப்போது உணவு வழங்கியுள்ளனர்.
“நான் உயிருடன் திரும்புவேன் என்று எதிர்பார்க்கவில்லை. வளைகுடா-தெலங்கானா நலம் மற்றும் பண்பாட்டுக் கூட்டமைப்பு தலைவர் பட்குரி வசந்த் ரெட்டி தனது பிரதிநிதி ஷங்கர் கவுடை அனுப்பி அவர்தான் எனக்கு விசா, டிக்கெட் ஆகிய ஏற்பாடுகளைச் செய்தார். சட்ட விரோதமாக அங்கு இருந்ததற்கான அபராதத்தொகையையும் ரத்து செய்ய அவரே நடவடிக்கை மேற்கொண்டார்” என்கிறார் கண்ணீரை அடக்கியபடியே வினோத்.