

பெங்களூரு காவல் நிலையங்கள் சிலவற்றில் சோதனை முறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெங்களூரு காவல் நிலையங்களில், காவலர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த அம்மாநகர காவல் ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.
புகார் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய மறுக்கப்படுகிறது, போலீஸார் கடுமையாக நடந்துகொள்கின்றனர் போன்ற புகார்களை தொடர்ந்து பெங்களூர் காவல் நிலையங்கள் மீது அந்நகர மக்கள் முன்வைத்துவந்தனர்.
இந்நிலையில், மாநகர காவல்துறை ஆணையரகம், காவலர்கள் செயல்பாடுகளை கண்காணிக்கும் வகையில் காவல் நிலையங்களில் கேமராக்களை பொருத்த உத்தரவிட்டுள்ளது.
முதற்கட்டமாக, வடக்குச் சரகத்துக்கு உட்பட்ட மல்லேஸ்வரம், சேஷாத்ரிபுரம், ஸ்ரீராம்புரா காவல்நிலையங்கள் உள்ளிட்ட 103 காவல் நிலையங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. மாநகர காவல் ஆணையர் அலுவலக உயர் அதிகாரிகள் கேமரா பதிவுகளை கண்காணிப்பார்கள் என ஆணையர் எம்.என்.ரெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, "காவல் நிலையங்களில் புகார்களை ஏற்க கால தாமதம் செய்யப்படுவதாகவும், குறிப்பாக பெண்களுக்கு எதிரான புகார் என்றால் அதை ஏற்பதில் தயக்கம் காட்டப்படுவதாகவும் புகார்கள் வந்தன.
சில காவல்நிலையங்களில், காவலர்களே குற்றவாளிகளுக்கு உதவுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்தே காவல்நிலையங்களில் கேமரா பொருத்து முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.