

ராஞ்சி மருத்துவமனைக்கு வெளியே தெரு நாய்கள் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் தூங்க முடியாமல் அவதிப்படுவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் புகார் தெரிவித்துள்ளார்.
ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்குத் தன்னை மாற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய ஆர்ஜேடி எம்எல்ஏவும், லாலுவுக்கு நெருக்கமானவருமான போலா யாதவ் கூறும்போது, ''மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான நாய்கள் உள்ளன. அவை இரவில் தொடர்ந்து குரைத்துக்கொண்டே இருப்பதால், லாலுவால் தூங்க முடியவில்லை. அத்துடன் கழிவறையிலும் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் பணம் செலுத்திச் சிகிச்சை பெறும் வார்டுக்கு அவரை மாற்றவேண்டும் என்று மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கான தொகையைச் செலுத்திவிடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.
பிஹாரில் 1990-களில் லாலு முதல்வராக இருந்தபோது, கால்நடை தீவனத் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்ட அரசு கருவூலங்களில் ரூ.900 கோடிக்கு மேல் ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாலுவுக்கு எதிரான வழக்குகளில் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் ராஞ்சியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்தத் தொற்று, நீரிழிவு மற்றும் வேறுசில நோய்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.