Published : 19 Sep 2018 12:18 PM
Last Updated : 19 Sep 2018 12:18 PM

‘4 அடி கூந்தலை வெட்டினால் தெய்வ குத்தம்’- 17 ஆண்டுகள் கழித்து கூந்தலை வெட்டிய பெண்

சடை போல இருந்த நீண்ட கூந்தலை வெட்டினால் தெய்வ குத்தம் ஆகிவிடும் என்று பயந்த கலாவதி, 17 வருடங்கள் கழித்து தனது 4 அடி நீளக் கூந்தலை வெட்டியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பினர் அளித்த கவுன்சிலிங்கை அடுத்து, கூந்தலை வெட்டச் சம்மதித்திருக்கிறார் கலாவதி. இந்தச் சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

50 வயது இல்லத்தரசியான கலாவதி பர்தேசி கடந்த 17 வருடங்களாக சடை (சிக்குப்பிடித்த முடி) போல இருந்த கூந்தலை வெட்டாமல் வைத்துள்ளார். தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறிய வார்த்தைகள் மற்றும் சமுதாயம் இழிவாகப் பேசும் என்ற எண்ணம் ஆகியவை தான் முடியை வெட்டாததற்குக் காரணம் என்கிறார் கலாவதி.

தன்னுடைய சடை முடியால் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பேசும் கலாவதி, ''என்னுடைய கூந்தலாலேயே நான் நிராகரிக்கப்பட்டேன். என்னுடைய உறவினர்கள் என்னுடன் பேச மாட்டார்கள். என்னை வேலைக்குச் சேர்த்தால் என் சாபம் அவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்று கூறி யாரும் எனக்கு வேலை தரமாட்டார்கள்.

அதுதவிர இந்த முடியால் சரியாகத் தூங்கமுடியாமல் அவதிப்பட்டேன். பயத்தைவிட இந்தக் காரணங்கள் என்னைக் கடுமையாக பாதித்தன.

முடி வெட்ட ரூ.60,000

சடை முடியை வெட்டிவிடலாமென்று முடிவு செய்தேன். பக்கத்தில் இருந்த சலூனுக்குச் சென்று முடியை வெட்டிவிடச் சொன்னேன்.

ஆனால் அவர்கள் சடை முடியை வெட்ட ரூ.60 ஆயிரம் கேட்டார்கள். அவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடியாததால் முடியை அப்படியே விட்டுவிட்டேன். மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பினர் என்னுடைய சடை முடியை வெட்டியதோடு நிற்காமல் என்னுடைய பயத்தையும் மூடநம்பிக்கையையும் போக்கிவிட்டார்கள்'' என்கிறார்.

மறைந்த பகுத்தறிவுவாதி நரேந்திர தபோல்கர் நிறுவிய அமைப்பு மகாராஷ்டிர அந்தாஷ்ரதா நிர்மூலன் சமிதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் மூலம் புனேவில் மட்டும் சுமார் 75 பெண்களுக்கு சடை முடிகள் அகற்றப்பட்டுள்ளன.

*

சுகாதாரக் குறைபாட்டாலோ, ஒட்டிக்கொள்ளும் தன்மை கொண்ட பொருள் தலைமுடியின் மீது பட்டாலோ இந்த சடை முடி உருவாகிறது. கடவுளின் கோபத்தால் தலைமுடி இவ்வாறு ஆகிறது என்று சில பகுதி மக்களால் இன்னும் நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x