Published : 11 Sep 2018 04:28 PM
Last Updated : 11 Sep 2018 04:28 PM

தெலங்கானா கோர விபத்துக்கு வேகத்தடை காரணம்: இரண்டு கர்ப்பிணிகள் உட்பட 44 பேர் பலி; பிரசவமாகி குழந்தையும் இறந்த பரிதாபம்

 

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கோரமான பேருந்து விபத்தில் இரு கர்ப்பிணிகள் உட்பட 44 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஜகித்யாலா மாவட்டத்தில் உள்ள ராம்சாகர், சனிவாரம் பேட்டா, பெத்தபல்லி, ஹிம்மத் பேட்டா ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், பெண்கள், முதியோர் ஆகியோர் கொண்டகட்டு பகுதியில் இருந்து ஜகித்யாலாவுக்கு அரசு பேருந்தில் இன்று (செவ்வாய்கிழமை) காலை சென்றுக்கொண்டிருந்தனர். அந்த பேருந்தில் கொண்டகட்டு பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

இதில் 80 பயணிகள் சென்றதால், பலர் நின்று கொண்டு பயணம் செய்ய நேரிட்டது. அப்போது, கொண்டகட்டு மலைப்பகுதில் இருந்து வரும் வழியில், கடைசி வளைவில் வந்த போது, அங்கிருந்த வேகத்தடை மீது பேருந்து வேகமாக சென்றதால், நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் 4 முறை புரண்டு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தின் காரணமாக பலத்த சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். அப்போது, பேருந்தில் பயங்கர மரண ஓலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், தாங்களாகவே ஓடிச் சென்று, பேருந்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த பேருந்தின் முன் பாகம் பயங்கரமாக சேதமடைந்தது. பலர் பேருந்தில் இருக்கைகளுக்கிடையே சிக்கி உயிரிழந்திருந்தனர்.

மேலும் பலர் தங்களை காப்பாற்றும்படி அலறினர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து ஜகித்யாலா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஜகித்யாலா மாவட்ட ஆட்சியர் சரத், எஸ்.பி சிந்து ஷர்மா மற்றும் போலீஸார், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதன் பின்னர், 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுவினர், கிரேன்கள் வரவழைக்கப்பட்டது. தொடர்ந்து மீட்பு பணிகளில் கிராமத்தினரும் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து பேருந்தில் 25 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயமடைந்த 30க்-கும் மேற்பட்டோர் ஜகித்யாலா, கரீம் நகர் மற்றும் ஹைதராபாத் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் 25 பேர் பெண்கள், 11 பேர் ஆண்கள் மற்றவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட சிறுவர், சிறுமியராவர். படுகாயமடைந்தவர்களில் பலரது நிலைமை மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

2 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவார். இவர், பேருந்து விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இதில், குழந்தை பிரசவமும் ஏற்பட்டு, பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோன்று, 7 மாத கர்ப்பிணியும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் அரசு, தனியார் ஊழியர்களும் உயிரிழந்தனர்.

வேகத்தடையே காரணம்

கொண்டகுட்டா பகுதியில் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் உள்ளது. இன்று செவ்வாய் கிழமை என்பதால், அனுமனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். சாமியை தரிசனம் செய்து விட்டு, அரசு பேருந்தில் திரும்பி வரும்போது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால், இறந்தவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் பக்தர்களாவர். கொண்டகுட்டா மலைப்பகுதியில் இருந்து 3வது கிலோமீட்டரில் அடிவாரம் உள்ளது. இந்த அடிவாரத்தின் 500 மீட்டர் தொலைவில் இந்த கோர விபத்து நடைப்பெற்றுள்ளது.

ஒரு வளைவில் எதிரே வந்த ஆட்டோவை மோதாமல் இருக்க, வேகத்தடை மீது அதே வேகத்தில் பஸ்ஸை இடது புறம் திருப்பியதால் நிலை தடுமாறி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததாக பேருந்தில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒட்டுநர் ஸ்ரீநிவாஸ் என்பவருக்கு இரு கால்களும் உடைந்ததால், அவர் ஜகித்யாலா அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். பேருந்து விபத்து குறித்து அறிந்ததும், விபத்துக்கான காரணத்தை கேட்டறிந்தார் காபந்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ். மேலும், இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர், தலா ரூ. 5 லட்சம் நிவாரணம்  வழங்குவதாக அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x