அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: முஸாபர் நகர் சர்ச்சை பேச்சு விவகாரம்

அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: முஸாபர் நகர் சர்ச்சை பேச்சு விவகாரம்
Updated on
1 min read

மக்களவைத் தேர்தலின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மீது முஸாபர்நகர் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் முஸாபர் நகரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அமித் ஷா, “நம்மை இழிவு படுத்தியவர்களை தேர்தலில் பழிவாங்க வேண்டும். பாடம் புகட்டு வதற்கு தேர்தல் நல்ல வாய்ப்பு” எனப் பேசியிருந்தார்.

சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில், போலீஸார் கடந்த ஏப்ரல் மாதம் அமித் ஷா மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமித் ஷா உ.பி.யில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதனிடையே, இவ்வழக்கு தொடர்பாக அமித் ஷா மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நியூ மாண்டி வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளர் யோகேந்தர் சிங் கூறும்போது, “அமித் ஷா மீது இரு பிரிவினரிடையே மதம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பகைமையைத் தூண்டியது (சட்டப்பிரிவு 153ஏ) திட்டமிட்டு பகைமையைத் தூண்டுவது (பிரிவு 295ஏ) தவறான தகவல், வதந்திகளைப் பரப்புவது (பிரிவு 505) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

காங்கிரஸ் திருப்தி

“அமித் ஷா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது திருப்தியளிக்கிறது. இதன் மூலம் அனைவரும் மகிழ்ச்சி யடைவார்கள்” என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இருப்பினும், நீதித்துறை தொடர்புடைய விஷயம் என்பதால் மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in