

கேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்த புகாருக்கு உள்ளான ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல், கேரள காவல்துறையின் முன் இரண்டாவது நாளாக ஆஜரானார்.
காவல்துறையின் பாதுகாப்போடு வந்த பிஷப்பின் கார், க்ரைம் பிரிவு அலுவலக வளாகத்துக்குள் காலை 11.05 மணிக்கு நுழைந்தது.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற விசாரணையில் காவல்துறையின் கேள்விகளுக்கு 7 மணி நேரம் பதிலளித்த பிஷப் பிராங்கோ, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக் குழு இன்றைய விசாரணைக்காகப் புதிய கேள்விகளைத் தயாரித்துள்ளனர்.
இந்த விசாரணை பல்வேறு கேமராக்களைக் கொண்டு நவீன டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்படுகிறது. இவை வழக்கு விசாரணைக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்தது என்ன?
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறை மாவட்ட பிஷப்பாகப் பணியாற்றி வந்தவர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஜூலை மாதம் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். கடந்த 2014 முதல் 2016 வரை பிராங்கோ தன்னைப் 13 முறை பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் கூறியுள்ளார்.
இப்புகார் மீது கோட்டயம் டிஎஸ்பி ஹரிசங்கர், வைக்கம் டிஎஸ்பி கே.சுபாஷ் ஆகியோர் தலைமையில் புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டுள்ளது. எனினும் பிஷப்புக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தாமதம் செய்யப்படுவதாக கேரளாவில் போராட்டம் வெடித்தது.
மாநில அரசு மற்றும் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.