Published : 21 Sep 2018 04:34 PM
Last Updated : 21 Sep 2018 04:34 PM

விநாயகருக்கு காணிக்கையாக காசு மட்டுமல்ல, இதையும் அளிக்கலாம்: மும்பையில் புதிய முயற்சி

 

விநாயகருக்குக் காணிக்கையாக வழக்கமாக பணம், சில்லறைக் காசுகள் மட்டுமே அனைவரும் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு மும்பையில் வித்தியாசமான முயற்சியைக் கையாண்டுள்ளனர்.

மும்பையைச் சுற்றியுள்ள புறநகர்ப்பகுதிகளில் இருக்கும் ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவும் வகையில், காணிக்கையாக பணம், காசுகள் அளிக்காமல் ஒரு பெரிய பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்தப் பெட்டியில் குழந்தைகளுக்குத் தேவையான பென்சில், பேனா, ரப்பர், நோட்டு,புத்தகங்கள், ஜியோமென்ட்ரி பாக்ஸ், போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்த செய்யப்பட்டிருந்து ஏற்பாடு அனைவரையும் மகிழ்ச்சியடைச் செய்தது.

இந்தப் பணியை மும்பையில் உள்ள டீம் பரிவர்த்தன் என்ற தொண்டு நிறுவனம் முன்னின்று செய்தது. இந்தப் பெட்டியில் காணிக்கையாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் ஏழை குழந்தைகளின் படிப்புக்காக இலவசமாக அளிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக ஒரு புகைப்படம் வைரலானது. அதில் விநாயருக்கு காணிக்கையாக பணம் செலுத்தாமல் குழந்தைகள் கல்விக்குப் பயன் பெறும் வகையில் பொருட்களை காணிக்கையாகச் செலுத்துங்கள் என்பதைக் குறிப்பிடும் வகையில் புகைப்படம் குறிப்பிட்டிருந்தது.

இதைப் பார்த்தபின்தான் இந்தத் தொண்டு நிறுவனம் களத்தில் இறங்கி பெரும்பாலான விநாயகர் சிலைக்கு அருகே பெட்டிகளை வைக்க முடிவு செய்தது.

இந்த விஷயத்தைக் கூறியதும் முதலில் பலர் எதிர்த்த போதிலும் குழந்தைகளின் கல்வி உதவிக்கான முயற்சி என்றவுடன் அமைதியாக ஏற்றுக்கொண்டனர்.

டீம் பரிவர்த்தன் அமைப்புடன் பல அமைப்புகளும் இணைந்து செயலாற்றின. குறிப்பாக தாதரில் உள்ள தத்தா ராவுல் மைதான் சர்வாஜ்நிக் கணேச உத்சவ் மண்டல், சித்திவிநாயக் சர்வாஜ்நிக் கணேசஉத்சவ் மண்டல், சியானில் உள்ள பத்மபூஷன் வசந்ததத்தா பாட்டீல் பிரதிஸ்தான் மண்டல், தானேயில் உள்ள பல்வேறு அமைப்புகள் பரிவர்த்தனோடு கைகோர்த்துச் செயல்பட்டனர். இதனால், இந்த விநாயகர் சதுர்த்திக்கு மும்பையில் விநாயகருக்கு காணிக்கையாக காசு, பணம் மட்டுமின்றி கல்விக்கான பொருட்களும் சேர்ந்தன.

டீம் பரிவர்த்தன் அமைப்பின் உறுப்பினர் நாம்தேவ் யெட்ஜே கூறுகையில், ‘‘வழக்கமாகக் குழந்தைகளின் கல்விக்கு பலர் பணம் அனுப்புவார்கள்அதில் நாங்கள் பேனா, பென்சில், நோட்டு, புத்தகம், உள்ளிட்டவற்றை வாங்கி பில் அனுப்புவோம். ஆனால், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகக் குழந்தைகளின் கல்விக்கு உதவ நினைத்தோம். அதன்படி, எங்கள் குழுவினர் மும்பையின் பல்வேறு இடங்களிலும் விநாயகர் சதுர்த்திக்கு காணிக்கையாகக் காசு மட்டுமல்ல கல்விக்கான பொருட்களயையும் காணிக்கையாகச் செலுத்தலாம் என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை ஒட்டினர்.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. நாங்கள் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைக்கு அருகே வைத்திருந்த காணிக்கை பெட்டியில் மக்கள் நோட்டு, புத்தகங்கள், பென்சில் பேனாக்கள் உள்ளிட்டவற்றை காணிக்கையாகச் செலுத்தினார்கள். இவற்றைச் சேகரித்து தாதர், தானே உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

மேலும், கோயில்களில் இனிமேல் உண்டியலுக்கு அருகே கல்விப் பெட்டி என்று வைக்க முடிவு செய்துள்ளோம். கல்விக்கு உதவுபவர்கள் பொருட்களாக அதில் செலுத்தலாம். கடவுளுக்குக் காசு பணத்தையும், பூக்களையும் மட்டுமல்ல கல்விக்கான பொருட்களையும் வழங்கலாமே’’ எனத் தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x