

ஹலோ! நான் முதல்வர் பேசுகிறேன்! நீங்கள் அளித்த புகாரின் குறை தீர்க்கப்பட்டு விட்டதா?’ என பொதுமக்களை தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்.
இவர், தான் அறிமுகப்படுத்திய முதல்வரின் ஹெல்ப்லைன் 181 திட்டம் சரியாக வேலை செய்கிறதா என சோதிக்கும் நோக்கில் நாள்தோறும் 15 நிமிடங்கள் பேசி வருகிறார். கடந்த திங்கள்கிழமை முதல் இந்நடவடிக்கையை அவர் தொடங்கியுள்ளார். இந்த சேவை கடந்த ஆகஸ்ட் 1-ல் பொதுமக்கள் புகார் செய்வதற்காக தொடங் கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் செய்யும் புகார், அதற்காக அமைக்கப்பட்டுள்ள கால்சென்டரில் முதலில் பதிவா கிறது. அங்கிருந்து, தேவைக்கு ஏற்றபடி சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு அந்த அழைப்பு மாற்றி விடப்படுகிறது. இந்த புகாரை பெற்ற பின் அது சரியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதா எனவும், அதன்மூலம் பொதுமக்கள் திருப்தி அடைந்துள்ளார்களா எனவும் முதல்வர் மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அறிந்து வருகிறார்.
இதுகுறித்து சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைத்து பொது மக்களும் அரசு சேவையை முழுமையாகப் பெற்று மகிழ்ச்சி யாக உள்ளார்களா என உறுதி செய்வதே இதன் நோக்கம். இந்த சேவையில் 5 ஆயிரம் அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். இதற்காக தினமும் 15 நிமிடங்கள் போனில் தொடர்பு கொண்டு, அரசு சேவையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தர விட்டுள்ளேன். இந்த திட்டம் அரசு மற்றும் பொதுமக்கள் இடையே பாலமாக செயல்படும்” என்றார்.
முதல்வரின் ஹெல்ப்லைனில் தினமும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் புகார் வரை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள் ளது. ஒரே சமயத்தில் நூறு பேரின் புகார்களை கேட்கும் விதத்தி லும் வசதி செய்யப்பட்டுள்ளது.