ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாகப் புகார்: கர்நாடக போலீஸார், மருத்துவர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ்

ஆபாசப் படம் பார்க்க வற்புறுத்தியதாகப் புகார்: கர்நாடக போலீஸார், மருத்துவர்களுக்கு நித்யானந்தா நோட்டீஸ்
Updated on
2 min read

தமக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முயன்ற மருத்துவர்களை, பிரதமர் மோடி எனக்கு நெருக்கமானவர் எனக் கூறி நித்யானந்தா மிரட்டியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், தன்னை ஆபாச படம் பார்க்கச் சொல்லி தகாத முறையில் நடத்தியதாக கர்நாடக சிஐடி போலீஸார், விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் மீது புகார் கூறியுள்ள நித்யானந்தா, அவர்களுக்கு தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ் அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த 8-ம் தேதி நித்யானந்தாவுக்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கு நித்யானந்தா சரியாக‌ ஒத்துழைக்கவில்லை. ஆதலால் ஆண்மை பரிசோதனை முழுமையாக நடத்தவில்லை. நீதிமன்றத்தை நாடி, மீண்டும் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிடக் கோருவோம் என கர்நாடக சிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி போலீஸாரிடம் நேற்று சமர்ப்பித்தார்.

'நான் தெய்வபிறவி'

இதனிடையே நித்யானந்தா கர்நாடக சிஐடி போலீஸாருக்கும், ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனைக்கும் தனது வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ''நித்யானந்தாவாகிய நான் இந்தியாவில் பெரும்பான்மையாக‌ வாழும் இந்து மக்கள் பெரிதும் மதிக்கும் சாமியாராக இருக்கிறேன். உலகம் முழுவதும் இந்து மதத்தின் பெருமைகளை பறைச்சாற்றி வரும் என்னை ஆண்மை பரிசோதனை என்ற பேரில், கர்நாடக சிஐடி போலீஸாரும் மருத்துவர்களும் அவமதித்துவிட்டனர்.

நான் ஒரு தெய்வப்பிறவி. ஆறு வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர். மேலும் தனிமையான அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது போலீஸாரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.

மேலும் தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு மோடியை தெரியும்

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவுகள் தொடர்பாக கர்நாடக சிஐடி போலீஸாரிடம் பேசிய போது, ''அவரிட‌ம் ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை மட்டுமே முழுமையாக நட‌த்தப்பட்டுள்ளது. ஆண்மை பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்காததால் நடத்த முடியவில்லை. அதனால் நாங்கள் ராம்நகர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம்.

ஆனால் நித்யானந்தா எங்களை முந்திக்கொண்டு நாங்களும் மருத்துவர்களும் ஆண்மை பரிசோதனையின் போது தகாத முறையில் நடந்துகொண்டதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பரிசோதனை செய்த மருத்துவர்களிடம், 'எனக்கு பிரதமர் நரேந்திர மோடியை நன்றாக தெரியும். அவரே பல முறை என்னை சந்தித்து ஆசி வாங்கி இருக்கிறார். என்னை கட்டாயப்படுத்தினால் நீங்கள் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக் கொள்வீர்கள்' என மிரட்டியுள்ளார்.

எனவே மருத்துவர்கள் அச்சத்தின் காரணமாக ஆண்மை பரிசோதனை முடிவு சான்றிதழில் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அதனால்தான் மருத்துவ அறிக்கை வர மிகவும் தாமதம் ஆனது. இன்னும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யாததால் நாங்கள் நீதிமன்றத்தை அணுக முடியவில்லை. விக்டோரியா மருத்துவமனையின் விரிவான மருத்துவ அறிக்கை கிடைத்த உடன் நீதிமன்றத்தை அணுகி, மீண்டும் ஆண்மை பரிசோதனை மேற்கொள்வோம். அதற்கும் நித்யானந்தா சம்மதிக்காவிட்டால், அவருக்கு கட்டாய ஆண்மை பரிசோதனை நடக்கும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in