Published : 06 Sep 2018 04:05 PM
Last Updated : 06 Sep 2018 04:05 PM

வீதிக்கு வந்து வாக்கு கேட்க காங்கிரஸ் தயாரா? - 105 வேட்பாளர்களை அறிவித்து சந்திரசேகர் ராவ் சவால்

தெலங்கானா சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்த கையோடு, தேர்தலில் போட்டியிடும் தெலங்கானா ராஷ்ட்டிர சமிதியின் 105 வேட்பாளர்களையும் அதிரடியாக அறிவித்துள்ளார் சந்திரசேகர் ராவ். தைரியம் இருந்தால் வீதிக்கு வந்து வாக்கு கேட்க காங்கிரஸ் தயாரா எனவும் அவர் சவால் விடுத்துள்ளார்.

முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் முடிய இன்னும் 10 மாதங்கள் உள்ளன. இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலோடு சேர்த்து தெலங்கானா மாநிலத் தேர்தலையும் நடத்த சந்திரசேகர் ராவ் விரும்புகிறார்.

இதையடுத்து, இன்று காலை தெலங்கானா அமைச்சரவை முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவையை கலைக்கப் பரிந்துரை செய்ய தீர்மானம் செய்யப்பட்டது.

அதன்பின், முதல்வர் சந்திரசேகர் ராவ் அந்த தீர்மானத்தை ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனைச் சந்தித்து அளித்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை கலைக்கப்பட்டதற்கான முறைப்படியான அறிவிப்பை ஆளுநர் நரசிம்மன் விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்டிர சமதி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். மொத்தம் 119 தொகுதிகளில், 105 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அவர் அறிவித்துள்ளார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘தெலங்கானா மாநிலம் 2014-ம் ஆண்டு பிரிக்கப்பட்டபோது, மிகபெரிய பிரச்சினையை சந்தித்தது. மிக மோசமான நிலையில் காங்கிரஸின் சுயநல அரசியலால் தவறான முறையில் மாநிலம் பிரிக்கப்பட்டது. போதிய நிதி ஆதாரம் இல்லாமல், வறுமை, குண்டுவெடிப்பு, போராட்டம் என தெலுங்கானாவை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது.

2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்ற பிறகு முன்னோடி மாநிலமாக தெலுங்கானாவை உருவாக்கியுள்ளோம். மக்களை சந்தித்து வாக்கு கேட்க கூட காங்கிரஸ் தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் வீதிக்கு வந்தால் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x