Published : 02 Sep 2018 12:43 AM
Last Updated : 02 Sep 2018 12:43 AM

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதியா?- கூடுதல் டிஜிபி குற்றச்சாட்டுகளுக்கு இடதுசாரி ஆதரவாளர்கள் மறுப்பு

மகாராஷ்டிரா கூடுதல் டிஜிபி குற்றச்சாட்டுகளை இடதுசாரி ஆதரவாளர்கள் மறுத்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி செய்தது, பீமா கோரோகான் கலவரம் தொடர்பாக இடதுசாரி ஆதரவாளர்கள் சுதா பரத்வாஜ், வரவர ராவ், வெர்னன் கோன்சால்வஸ், அருண் பெரைரா,கவுதம் நவலகா ஆகிய 5 பேர்கைது செய்யப்பட்டனர். இதைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்வழக்கு தொடுக்கப்பட்டது. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களை வரும் 6-ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மகாராஷ்டிரா போலீஸ் கூடுதல் டிஜிபிபரம்பீர் சிங் மும்பையில் நேற்றுமுன்தினம் நிருபர்களிடம் பேசியபோது, கைது செய்யப்பட்ட 5 பேரும் மாவோயிஸ்ட் அமைப்புகள் மற்றும் மணிப்பூர், காஷ்மீர் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் பரிமாறிக் கொண்ட  ஏராளமான கடிதங்களையும் நிருபர்களிடம் அவர் காட்டினார்.

இதுதொடர்பாக சுதா பரத்வாஜ் நேற்று கூறியபோது, "என் மீதும்,இதர மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் குற்றம் சாட்டுவதற்காக போலியாக நிறைய கடிதங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

வெர்னன் கோன்சால்வஸ் மகன்சாகர் கோன்சால்வஸ் கூறியபோது,"போலீஸார் காட்டும் கடிதங்கள்போலியானவை." என்றார்.

வரவர ராவின் உறவினர் ஒருவர் கூறியபோது, "உச்ச நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல்செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதை விடுத்து கூடுதல் டிஜிபி நிருபர்களிடம் கடிதங்களை காட்டுகிறார். இதுநீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகும்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நாக்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியபோது, கைது செய்யப்பட்ட 5 பேரும் மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள். அவர்களிடம் இடதுசாரி சிந்தனை இருப்பது இயல்பானது. சுதந்திரநாட்டில் கருத்துகளை கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. மக்களின் கவனத்தை திசை திருப்ப மனித உரிமை ஆர்வலர்களை மகாராஷ்டிரா அரசு கைது செய்துள்ளது என்று தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் மறுப்பு

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று கூறியபோது, "சுதந்திர நாட்டில் அனைவருக்கும் கருத்துரிமை உள்ளது. ஆனால் நாட்டை சீர்குலைக்கும் வகையிலோ, கலவரத்தை தூண்டும் வகையிலோ பேசினால் அதே ஏற்க முடியாது. நக்சல், மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x