Last Updated : 10 Sep, 2018 05:02 PM

 

Published : 10 Sep 2018 05:02 PM
Last Updated : 10 Sep 2018 05:02 PM

‘இந்தியாவிலேயே முதல் முறை; ஓட்டுநர் உரிமம் உட்பட இனி வீட்டுக்கே வந்துவிடும், அரசின் 40 சேவைகள்’: டெல்லியில் தொடங்கி வைத்தார் முதல்வர் கேஜ்ரிவால்

ஓட்டுநர் உரிமம், சாதிச்சான்றிதழ், திருமணச்சான்றிதழ் உள்ளிட்ட 40 வகையான சேவைகளை டெல்லி மக்களின் வீட்டுக்கே வந்துஅளிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கிவைத்தார்.

டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடந்து வருகிறது, அங்கு முதல்வராக அரவிந்த் கேஜ்ரிவால் இருந்துவருகிறார். மக்களின் வீட்டுக்கே வந்து ரேஷன் பொருட்கள் அளிப்பது உள்ளிட்ட 40 வகையான சேவைகளை ஆம் ஆத்மி அரசு அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.

ஆனால், கடந்த துணை நிலை ஆளுநர் பைஜால் அதற்குத் தடைவிதித்தார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வெளியான தீர்ப்பில் மக்களுக்கான திட்டங்களை தேர்வு செய்யப்பட்ட அரசு செய்யத் தடையில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கூடுதலாக 30 சேவைகள் விரைவில் வழங்கப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிஷோடியா அறிவித்திருந்தார். அப்போது குறிப்பிடும் சேவைகளைப் பெறுவதற்கு டெல்லி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அரசு அலுவலகங்களின் வாசலில் நிற்கத் தேவையில்லை. வீட்டுக்கே சேவைகள் கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

சாதிச் சான்றிதழ், புதிய குடிநீர் இணைப்பு, வருமானவரிச் சான்று, ஓட்டுநர் உரிமம், ரேஷன்கார்டு, திருமணப் பதிவேடு, நகல் ஆர்.சி., ஆர்.சி.யில் வீட்டு முகவரியை மாற்றுதல் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட சேவைகள் அடங்கும்.

இதன்படி டெல்லியைச் சேர்ந்த ஒருவர் ஒட்டுநர் உரிமம் எடுக்க விரும்பினால், அவர் அரசு அங்கீகரித்துள்ள கால் சென்டருக்கு அழைப்பு செய்து தகவலைக் கூறினால் போதுமானது. அதன்பின் கால் சென்டரில் இருந்து வீட்டுக்கு வரும் நபர்கள் தேவையான ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, ஓட்டுநர் உரிமம் எடுப்பதற்கான பணிகளைச் செய்வார்கள். இதற்குக் குறைந்தபட்சக் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக 40 சேவைகளை மக்களின் வீட்டுக்கே வந்து அளிக்கும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் கேஜ்ரிவால் பேசியதாவது:

மக்களின் வீட்டுக்கே வந்து அரசு 40 வகையான சேவைகளை அளிப்பது என்பது அரசு நிர்வாகத்தில் புரட்சிகரமான மாற்றமாகும். முதல்கட்டமாக 40 வகையான சேவைகளை அறிமுகப்படுத்துகிறோம், அடுத்த ஒரு மாதத்தில் சேவைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, 100 சேவைகளாக உயர்த்துவோம்.

மக்கள் 1076 என்ற எண்ணுக்கு அழைத்து தங்களுக்கு என்னவிதமான அரசு சேவை தேவை என்பதைக் கோரிக்கை வைத்தால் அவர்களின் வீட்டுக்கே வந்து சேவை அளிக்கப்படும். இந்தச் சேவை காலை 8 மணியில் இருந்து இரவு 10 மணிவரை இருக்கும். இதற்காக கால்சென்டர்கள், சேவைகளை அளிப்பதற்காகத் தனியாக பணியாட்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 24 மணிநேரமும் பணி செய்யும் விதத்தில் ஷிப்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த நாட்டுக்கே உதாரணமாக இருக்கும் வகையில் அரசின் நிர்வாகத்தை மக்களின் வீட்டுக்கே கொண்டு வந்து அளிக்கிறோம்.

சாதிச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பிறப்புச் சான்றிதழ், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 வகையான சேவைகள் டெல்லி மக்களுக்கு இனி கிடைக்கும். வீட்டுக்கு வந்து சேவை அளிக்கும் போது குறைந்தபட்சமாக ரூ.50 கட்டணமாக மக்கள் அளித்தால் போதுமானது.

இனிமேல் அரசின் சேவைகளைப் பெற மக்கள் அலுவலகங்கள் முன் காத்திருக்கத் தேவையில்லை. மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தியுள்ளோம், சேவைகளைப் பெறுவதற்காக அரசு அலுவலர்களுக்குக் கையூட்டு கொடுப்பதைத் தடுத்திருக்கிறோம்.

இந்தத் திட்டத்துக்காக அரசு ரூ.12 கோடி செலவு செய்துள்ளது.

முக்கியத் திட்டமான ரேஷன் பொருட்களை வீட்டுக்கே அளிக்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

வீட்டுக்கே வந்து சேவை அளிக்கும் இந்தத் திட்டத்துக்காக விஎப்எஸ் குளோபல் சர்வீஸஸ் என்ற நிறுவனத்தை டெல்லி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. போலீஸார் ஆய்வு, விசாரணைக்குப் பின், 66 மொபைல் சேவைதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், கால்சென்டரும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மொபைல் சேவைதாரரையும், கண்காணிக்க ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 6 பேரையும் கண்காணித்து பணிகளை மாற்றிக்கொடுப்பார். இந்த மொபைல் சேவைதாரர்களுக்கு உதவியாக பயோமெட்ரிக் எந்திரம், கேமிரா, லேப்டாப் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x