Last Updated : 18 Sep, 2018 08:42 AM

 

Published : 18 Sep 2018 08:42 AM
Last Updated : 18 Sep 2018 08:42 AM

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு; 7 பேர் விடுதலையில் சிக்கல்: பலியானோர் குடும்பத்தினர் மனு மீது உச்ச நீதிமன்றம் விசாரணை

ராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்வதை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் குண்டு வெடிப்பில் பலியானோர் குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவில் திருத்தம் செய்து 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இவர்களை விடுவிப்பது குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதையடுத்து, கடந்த 9-ம் தேதி தமிழக அமைச்சரவை கூடி, சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து தீர்மானம் நிறைவேற்றியது. இந்த பரிந்துரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு கிடைத்தாலும், சிலர் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்ட குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது, அவருடன் மற்ற 14 பேர் கொல்லப்பட்டனர். இதில் தனு தவிர மற்றவர்கள் விடுதலைப் புலிகள் பிரச்சினைக்கு தொடர்பில்லாதவர்கள். அவர்களது குடும்பத்தினர் சார்பிலும், வேறு சில அமைப்புகள் சார்பிலும் 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு கிளம்பியது. குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட குடும்பத்தினர் சார்பில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

விடுவிக்கக் கூடாது

சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்கக் கூடாது என்று அவர்கள் தரப்பில் வலியுறுத் தப்பட்டு வருகிறது. மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில், விடுதலை குறித்து மத்திய உள்துறை அமைச் சகத்துக்கு ஆளுநர் அறிக்கை அனுப்பிவிட்டதாக தகவல் வெளியானது. இதை மறுத்து ஆளுநர் மாளிகை சார்பில் கடந்த சனிக் கிழமை அறிக்கை வெளியானது. அதில், ‘ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்துவரும் 7 பேர் விடு தலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது முடிவெடுப்பது சற்று சிக்கலான விஷயம். இதில், சட்டப்பிரச்சினை, நிர்வாக மற்றும் அரசியலமைப்பு சட்டரீதியான பிரச்சினைகள் அடங்கியிருப்பதால் ஆளுநர் தீர ஆலோசித்து தக்க முடிவெடுப்பார்’ என்று தெரிவிக் கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் வழக்கு

இதற்கிடையே, 2014-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் 7 பேர் விடு தலை குறித்து எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து, காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன், அப்பாஸ், ஜான் ஜோசப், சாமுவேல் திரவியம், ராம.சுகந்தன் உள்ளிட் டோர் சார்பில் அப்போது தொடரப் பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்து ஆளுநருக்கு பரிந்துரை அனுப்பியுள்ள விவகாரம் அப்போது நீதிமன்றத்தின் கவனத் துக்கு கொண்டு வரப்பட்டது. அவர்களை விடுதலை செய் வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கு என்பதால், தற்போதுள்ள நிலை மற்றும் தமிழக அரசின் புதிய பரிந்துரைகளை சேர்த்து 3 வாரங்களுக்குள் புதிய மனு தாக்கல் செய்யும்படி பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதை யடுத்து 7 பேர் விடுதலை விவ காரம் மீண்டும் உச்ச நீதிமன்ற படிக் கட்டுகளைச் சென்று சேர்ந்துள்ளது.

பலியானவர் மகன் மனுதாரர்

இந்த வழக்கில் மனுதாரர்களில் ஒருவரான அப்பாஸ் என்பவர் ராஜீவ் கொலையின்போது குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட சம்தானி பேகம் என்பவரின் மகன். கணவனை இழந்த சம்தானி பேகம், 1991-ம் ஆண்டு தென்சென்னை மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக இருந்தவர். ராஜீவ் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளச் சென்றபோது குண்டுவெடிப்பில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x