

ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக பயணி ஒருவருக்கு தகவல் தெரிவிக்காத வடக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியை சேர்ந்த மனோஜ் குமார், 2013-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், அந்த ரயிலை வடக்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்திருந்தது. அது பற்றிய தகவல் தெரியாத மனோஜ் குமார், குறிப்பிட்ட நாளில் ரயில் நிலையத்திற்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பினார்.
ரயில்வே நிர்வாகத்தின் சேவை குறைபாடு தொடர்பாக மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் முறையிட்டார். இறுதியில், இந்த புகார் தொடர்பாக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
விசாரணையின் இறுதியில் வடக்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும், அந்த தொகையை மனோஜ் குமாரிடம் வழங்குமாறு கூறியும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்தது.