

கோவாவில் புதிய முதல்வரை தேர்வு செய்யும் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே ஒத்தக்கருத்தை ஏற்படுத்த முடியாததால் சட்டப்பேரவையை கலைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நிலை பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக அம்மாநிலத்துக்கு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என பாஜக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் பாஜக தலைமை திங்களன்று இறுதி முடிவெடுக்கும் என தெரிகிறது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள் கோவா செல்கின்றனர்.
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கடந்த பிப்ரவரி மாதம் கணைய அழற்சி காரணமாக சில மாதங்களுக்கு முன், மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் கடந்த மார்ச்சிலிருந்து ஜூன் வரை அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். சில நாட்கள் அரசு பணிகளை கவனித்து வந்தநிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
கோவா திரும்பிய நிலையில் அவருக்கு பூரண குணம் ஏற்படவில்லை. அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதையடுத்து வடக்கு கோவா மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மனோகர் பாரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலம் கருதியும் தற்போதைய நிலையில் நிர்வாக பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் இருப்பதால் வேறு ஒருவரிடம் முதலமைச்சர் பொறுப்புகளை ஒப்படைக்க அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
பாஜகவின் கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி உள்ளிட்டவை புதிய முதல்வரை தேர்வு செய்ய வலியுறுத்தி வருகின்றன. அதுபோலவே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளும், கோவாவில் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றன.
இதனால் பாரிக்கருக்கு பதிலாக புதிய முதல்வரை தேர்வு செய்ய பாஜக மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள், கோவா சென்று ஆலோசனை நடத்தினர். பாஜக அமைச்சர் சுதீன் தன்வீல்கரை துணை முதலமைச்சராக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், கோவா பார்வர்டு கட்சித் தலைவர் விஜய் சர்தேசாய் இந்த திட்டத்தை எதிர்த்து வருகிறார். இதையடுத்து விஜய் சர்தேசாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாஜக தலைவர் அமித் ஷா பேசினார். எனினும் கூட்டணிக் கட்சிகள் சமரச திட்டத்தை ஏற்கவில்லை.
இதனிடையே, கோவாவில் மாற்று அரசு அமைக்க காங்கிரஸ் உரிமை கோரியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சந்திரகாந்த் கவலேகர் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரும் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று மனு அளித்தனர்.
இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் சந்திரகாந்த கவலேகர் இன்று கூறுகையில் ‘‘கூட்டணிக் கட்சிகள் மிரட்டுவதால் வேறு வழியில்லாமல் ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிடுகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்தல் நடத்துவது ஏற்புடையதல்ல. பாஜக சுயநலத்துக்காக இந்த சட்டப்பேரவையை கலைக்க முனைகிறது’’ எனக் கூறினார்.