Published : 21 Sep 2014 10:41 AM
Last Updated : 21 Sep 2014 10:41 AM

மதுரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,160 லிட்டர் ஆசிட் பறிமுதல்: சோதனையிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி

மாணவிகள் மீதான ஆசிட் வீச்சு சம்பவம் எதிரொலியாக மதுரையில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அனுமதி பெறாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 15,160 லிட்டர் ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்டம் முழுவதிலும் சோதனை தொடரும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கல்லூரி மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி ஆகியோர் மீது கடந்த 12-ம் தேதி ஆசிட் வீசப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஆசிட் பதுக்கி வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் இல. சுப்பிரமணியன் உத்தரவிட்டிருந்தார். கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில் திருமங்கலத்தில் 125 லிட்டர், அவனியாபுரத்தில் 143 லிட்டர், அலங்காநல்லூரில் 15 லிட்டர் ஆசிட் சிக்கியது.

சனிக்கிழமை மதுரை சிந்தாமணி அருகே அயனாபுரத்தில் பெரிய அளவில் ஆசிட் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. மதுரை கோட்டாட்சியர் என்.ஆறுமுகநயினார், மதுரை தெற்கு தாசில்தார் ஜி.சூரியகுமார் தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியிலுள்ள ராஜ் கெமிக்கல் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தில் நடத்திய ஆய்வில் டேங்கர்களில் ஆசிட் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. ஒரு டேங்கரில் 8 ஆயிரம் லிட்டர், மற்றொரு டேங்கரில் 7 ஆயிரம் லிட்டர், மேலும் தலா 40 லிட்டர் கொண்ட 4 கேன்கள் என மொத்தம் 15,160 லிட்டர் ஆசிட் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் ஆட்சியருக்கு தகவல் அளித்தனர். அவரது உத்தரவின் பேரில் கெமிக்கல் நிறுவனத்தை முழுமையாக ஆய்வு நடத்தி ஆசிட் இருந்த டேங்கர்களுக்கு சீல் வைத்தனர்.

இது குறித்து அதிகாரிகள் ஆறுமுகநயினார், சூரியகுமார் கூறியது: சோப்பு தயாரிப்பு தொழில் அங்கு நடைபெறுகிறது. வட மாநிலங்களிலிருந்து டேங்கர்களில் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் வருகிறது. இந்த ஆசிட்டை இரும்பில் துரு எடுக்கவும், கழிவறை சுத்தம் செய்ய, பெயிண்ட்டில் கலக்க பயன்படுத்தியுள்ளனர். இங்கிருந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு விற்பனை செய்துள்ளனர். இதற்கு அரசிடம் அனுமதி பெற வேண்டும். காவல்துறை, தீயணைப்புத் துறையில் ஆட்பேசனையில்லா சான்றிதழ் பெற்ற பின்பே இந்த அனுமதி வழங்கப்படும். தற்போது சோதனையில் சிக்கிய நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. அனுமதி வழங்கும் முன்பே ஆசிட்டை வாங்கி வைத்துள்ளனர். இதையடுத்து ஆசிட் பறிமுதல் செய்யப்பட்டு, கெமிக்கல் நிறுவன உரிமையாளர் செல்வராஜ் (45) மீது தமிழ்நாடு நச்சுத்தன்மை வாய்ந்த பொருட்கள் விற்பனை ஒழுங்குமுறை சட்டம் 2014-ன் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், இந்த சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ. 1000 அபராதம் அல்லது ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும் என்றனர். டேங்கரில் பதுக்கிவைக்கப்பட்ட ஆசிட் சிக்கியதால், இந்த சோதனையை தொடர அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x