Published : 08 Sep 2018 05:38 PM
Last Updated : 08 Sep 2018 05:38 PM

உலகிலேயே யார் சுறுசுறுப்பான மக்கள்; உலக சுகாதார நிறுவனம் அறிக்கை: இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகிலேயே சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் நாடுகள் குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது

உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான மக்கள் வசிக்கும் மக்கள் அதிகம் கொண்ட நாடு குறித்து உலக சுகாதார நிறுவனம் ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. 168 நாடுகளில் வசிக்கும்  மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, அவர்களின் சுறுசுறுப்புத் தன்மை, உடற்பயிற்சி, வேலை, விழித்திருக்கும் தன்மை, காலையில் எழுதல், உள்ளிட்ட விஷயங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதுகுறித்து தரவரிசையை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. தி லான்சட் என்ற மருத்து இதழில் அந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

உலகளவில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா நாட்டு மக்கள்தான் அதிகம் சுறுசுறுப்பானவர்கள். அங்குள்ள மக்களில் 5.5 சதவீதம் பேர் மட்டுமே போதுமான அளவில் உடற்பயிற்சியில்லாமல், சுறுசுறுப்பில்லாமல் இருக்கிறார்கள்.

கடைசி இடத்தில் வளைகுடா நாடான குவைத் நாட்டு மக்கள்தான் சுறுசுறுப்பற்றவர்கள், சோம்பேறிகள். இந்த நாட்டு மக்களில் 67 சதவீதம் பேர், போதுமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

இதில் இந்தியா 117-வது இடத்தில் உள்ளது. இந்திய மக்கள் தொகையில் 34 சதவீத மக்களுக்குச் சுறுசுறுப்பு போதுமானதாக இல்லை, சோம்பேறிகளாகவும், உடற்பயிற்சியும், நடைப்பயிற்சி இன்றியும் இருக்கிறார்கள். அதாவது 30 கோடிக்கும் மேலான மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது.

குவைத் தவிர்த்து அமெரிக்காவின் தீவுப்பகுதியான அமெரிக்கன் சமோ, சவூதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளில் பாதிக்கும் மேற்பட்ட மக்களுக்குச் சுறுசுறுப்பு போதாது. முறையான உடற்பயிற்சி எடுத்துக்கொள்வதில்லை.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 168 நாடுகளில் 32 சதவீதம் அதாவது 55 நாடுகளைச் சேர்ந்த மக்களில் மூன்று பங்குக்கு மேலானவர்கள் போதுமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை.

168 நாடுகளில் 159 நாடுகளில் உள்ள பெண்களுக்கு போதுமான சுறுசுறுப்பு இல்லை, உடற்பயிற்சி இல்லை, ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சுறுசுறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 168 நாடுகளில் வசிக்கும் மக்களில் நான்கில் ஒருபகுதி மக்கள் நாள்தோறும் போதுமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவதில்லை. இதனால், உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் உருவாகக்கூடும்.

குறிப்பாக இதய நோய், நீரழிவு நோய், உடல்பருமன், மனநிலை பாதிப்பு, வாழ்க்கைத் தரம் குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x