அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றது இந்தியா

அமைதிப் பேச்சுவார்த்தை: பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்றது இந்தியா
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் இடையே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க வலியுறுத்தி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்த கோரிக்கையை இந்தியா ஏற்பதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறும்போது, ''இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மக்தூம் ஷா மஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு இடையில் பேச்சுவார்த்தை நடக்கும். இந்தச் சந்திப்பு நியூயார்க்கில் ஐ.நா. சபைக்கூட்டத்தில் நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றது முதல், பல்வேறு பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும், பாகிஸ்தான் இனி எந்த நாட்டுடனும் போரில் ஈடுபடாது என்றும், மக்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தையை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்று இம்ரான் கான் வலியுறுத்தி வந்தார். அதைத் தொடர்ந்து அவர், அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கு தற்போது இந்தியா தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2016-ல் பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை முற்றிலுமாக முறிந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in