Published : 29 Sep 2018 11:56 am

Updated : 30 Sep 2018 11:20 am

 

Published : 29 Sep 2018 11:56 AM
Last Updated : 30 Sep 2018 11:20 AM

நிற்காமல் சென்ற கார்; விரட்டிச் சென்று துப்பாக்கியால் சுட்ட போலீஸ்: சாப்ட்வேர் நிர்வாகி பலி - வாகன சோதனையில் பரிதாபம்

 

உத்தரப் பிரதேசத்தில் காரை நிற்காமல் ஓட்டிச் சென்ற சாப்ட்வேர் நிறுவனத்தின் மூத்த நிர்வாகி மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவர் பலியானார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி (வயது 38). அவர் தனது நண்பருடன் சேர்ந்து ஹோட்டல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இன்று அதிகாலை 1:30 மணியளவில் சொகுசு காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது சாலையில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போலீஸார் காரை மறித்தனர். ஆனால் வேகமாக வந்த கார் நிற்காமல் செல்ல முற்பட்டது. எனினும் வாகன சோதனைக்காக பைக்கில் நின்று கொண்டிருந்த 2 போலீஸாரும் காரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். கார் வேகமாக மோதியதில், போலீஸாரின் பைக் கீழே சரிந்தது.

இதையடுத்து விவேக் திவாரி காரை வேகமாக ஓட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்டார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் விவேக் திவாரியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சற்று நேரத்துக்கு பின் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து காவலர் பிரசாந்த் குமார் கூறுகையில் ‘‘காரில் வந்தவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்தது. காரை நிறுத்தாமல் சென்றதுடன் எங்களை காரை ஏற்றி கொலை செய்யவும் முயன்றனர். இதனால் எங்களை பாதுகாத்துக் கொள்வதற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தினோம்’’ எனக் கூறினார்.

ஆனால் விவேக் திவாரியுடன் காரில் சென்றவர்கள் போலீஸார் தெரிவித்த தகவலை மறுத்துள்ளனர். ‘‘எங்களை தடுத்து நிறுத்தி பணம் பறிக்க அவர்கள் முயன்றனர். பயந்துபோனதால் நாங்கள் அந்த இடத்தை விட்டு செல்ல முற்பட்டோம். ஆனால் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டினர். எதும் கூறாமல் விவேக்கை சுட்டுக் கொன்று விட்டனர்’’ எனக் கூறினர்.

 உயிரிழந்த விவேக் திவாரிக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இருவரும் போலீஸார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். 

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author