Published : 28 Sep 2018 12:15 PM
Last Updated : 28 Sep 2018 12:15 PM

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி; தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு: திருவாங்கூர் தேவசம் போர்டு முடிவு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்போவதாக திருவாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் விஷயத்தில் பாகுபாடு காட்டக்கூடாது என நீதிபதிகள் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கேரள மாநில திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்ம குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பு எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீர்ப்பை முழுமையாக படித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். கோயிலின் பழக்க வழக்கங்கள் மாறாமல் இருக்க எங்களால் முயன்றதை செய்வோம். எனினும் நீதிமன்ற தீர்ப்பு என்பதால் அதை அமல்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்வது குறித்து விரைவில் முடிவு செய்வோம்’’ எனக் கூறினார்.

இதுகுறித்து கோயில் தலைமை தந்திரி கண்டரரு, ராஜீவரரு கூறுகையில் ‘‘இந்த தீர்ப்பு எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. எனினும் தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்’’ எனக் கூறினார். இதுபோலவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என ஐயப்ப பக்தர்கள் சங்கமும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x