Published : 24 Sep 2014 03:24 PM
Last Updated : 24 Sep 2014 03:24 PM

ரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்

“ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும்” என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலராக இருந்த ஹாசீம் பாய்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை நவாப்கள் ஆட்சி செய்த இடம். 55 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கோட்டை வளாகம் இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முறையான பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது. 1972-லிருந்து இந்தக் கோட்டையில் காவலராக இருந்தவர் ஹாசீம் பாய். 37 ஆண்டு காலம் பணி செய்து 2008-ல்

விருப்ப ஓய்வு பெற்றுவிட்டாலும் ரஞ்சன்குடி கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றுத் தடயங்களை உலகம் அறிய வேண்டும் என துடிக்கிறார் ஹாசீம்பாய். இதற்கு காரணம் பரம்பரை பரம்பரையாய் அவரது குடும்பத்துக்கும் அந்தக் கோட்டைக்கும் உள்ள தொடர்பு.

அதுகுறித்து நம்மிடம் பேசினார் ஹாசீம்பாய். “நாங்களும் நவாப் மன்னர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்தான். ரஞ்சன்குடி கோட்டையை கடைசியாக ஆற்காடு முகமதலி ஆட்சி செய்திருக்கிறார். எனது மூன்றாவது பாட்டனார் பாக் பாபாஜி, நவாப்கள் ஆட்சியில் போர்ப் படைத் தளபதியாக இருந்திருக்கிறார். அவருக்குப் பின்னால் வந்தவர்களும் இந்தக் கோட்டையில் முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளனர்.

சுதந்திரத்துக்கு பிறகு எனது தந்தையாருக்கு இந்தக் கோட்டையை காவல் காக்கும் காவலர் பணி கொடுத்தார்கள். அவருக்குப் பிறகு 1972-ல் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக எனக்கு காவலர் பணி கொடுத்தார்கள். முன்னோர்கள் ஆட்சி செய்த அரண்மனை என்பதால் இந்தக் கோட்டையை எனது வீடு மாதிரிதான் நான் பார்த்தேன்; இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஆர்வத்துடன் கோட்டையைச் சுற்றிக் காட்டுவேன். அப்படி சுட்டிக்காட்டியபோதுதான் மேலே இருந்து தவறி விழுந்து எனது இடது கால் முடமாகிவிட்டது.

மழைக்காலங்களில் இந்தக் கோட்டைப் பகுதியில் காலாற நடக்கும்போது அந்தக் காலத்துச் செப்புக் காசுகளை ஏராளமாக கண்டு எடுத்திருக்கிறேன். மொகலாயர்கள், பாண்டியர்கள், சோழர்கள், விஜய நகரப் பேரரசர்கள் பயன்படுத்திய காசுகள் எல்லாம் என் கைக்குக் கிடைத்து அவைகளை பள்ளிக்கூடத்துப் பிள்ளை கணக்காய் சேர்த்து வைத்திருந்தேன். எம்.ஜி.ஆர். காலத்தில் மாநில தொல்லியல் துறை இயக்குநராக இருந்த நாகசாமி, நான் சேமித்து வைத்திருந்த காசுகளை தரும்படி கேட்டார். அப்போது எனக்கு இதன் அருமை தெரியவில்லை. நான் சேமித்து வைத்திருந்த முக்கால் படி செப்புக் காசுகளை அவரிடம் எடுத்துக் கொடுத்தேன்.

அவருக்குப் பிறகு நடனகாசிநாதன் இயக்குநராக இருந்தபோதும் என்னிடம் இருந்த காசுகளை கேட்டு வாங்கினார். இவர்கள் இருவருக்கும் கொடுத்த பிறகு சேமித்த காசுகளைத்தான் இப்போது நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன். இப்போதும் வாரம் ஒருமுறை ரஞ்சன்குடி கோட்டைக்குச் சென்று அதன் அழகை ரசித்துவிட்டு வருவேன். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கோட்டையில் பல பகுதிகள் மண்ணுக்குள் புதைந்து கிடக்கின்றன.

எனக்கு தெரிந்தே கோட்டைக்குள் 11 கிணறுகள் இருந்தன. அவை அத்தனையும் இப்போது மண் மூடிவிட்டது. அந்தக் கிணறுகளுக்குள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நவாப் தளபதிகள் போர் கருவிகளைப் பதுக்கி வைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கிணறுகள் இருந்த இடமும் கோட்டைக்குள் புதைந்துபோன இன்னும் சில முக்கியமான பகுதிகளும் எனக்கு மட்டும்தான் தெரியும்.

அவற்றை எல்லாம் தோண்டி எடுத்து அதனுள்ளே உள்ள வரலாற்றுத் தடயங்களை வெளிக் கொண்டு வரவேண்டும். அதற்காக, நான் உயிருடன் இருக்கும் காலத்திலேயே என்னைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொல்லியல் துறைக்கு பலமுறை கடிதம் எழுதினேன். எந்த நடவடிக்கையும் இல்லை. தொன்மையான இந்தக் கோட்டைக்குள் புதைந்திருக்கும் வரலாற்றுத் தடயங்களை வெளியில் கொண்டுவர முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப்பட வேண்டும். இந்தக் கோட்டையை சுற்றுலா தலமாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று உணர்ச்சி ததும்பச் சொன்னார் ஹாசீம் பாய்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x