Last Updated : 02 Sep, 2014 12:00 AM

 

Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

நரியை வைத்து ‘திருவிளையாடல்’ நடத்த அனுமதி மறுப்பு: மீனாட்சி கோயிலில் இந்த ஆண்டும் பொம்மையை வைத்தே திருவிழா

மீனாட்சி அம்மன் கோயிலில் செப். 3-ம் தேதி நடைபெறும் ‘நரியை பரியாக்கும்’ திருவிழாவுக்கு உயிருள்ள நரியை பயன்படுத்த வனத்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதன்மூலம் இந்த ஆண்டும் பொம்மை நரி மூலமே திருவிழாவை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மூலத் திருவிழாவின் 8-ம் நாளில் ‘நரியை பரியாக்குதல்’எனும் வரலாற்று நிகழ்ச்சி நடத்தப்படும். இதற்காக உயிருள்ள நரியைப் பிடித்து கூண்டில் அடைத்து கோயிலுக்கு கொண்டு வருவர். கோயிலில் திருவிழா முடிந்ததும் அந்த நரியை மீண்டும் கொண்டு காட்டுக்குள் விட்டுவிடுவர்.

பக்தர்களுக்கு ஏமாற்றம்

இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளின் பட்டியலில் நரி இடம்பெற்றுள்ளதால், அதை கூண்டில் அடைத்து வைத்து திருவிழா நடத்தக்கூடாது என சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளாக உயிருள்ள நரிக்கு பதில், பொம்மை நரியை வைத்து திருவிழா நடத்தி வருகின்றனர். இது பக்தர்களிடம் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. எனவே மீண்டும் உயிருள்ள நரியை வைத்து திருவிழா நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து மீனாட்சி கோயில் இணை ஆணையர் எம்.நடராஜன் கடந்த வாரம் மதுரை மாவட்ட வன அலுவலருக்கு கடிதம் எழுதினார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது:

இறைவனே சுந்தரேசுவராகவும், இறைவியே மீனாட்சியாகவும் அவதரித்து மதுரையம்பதியில் ஆட்சிபுரிந்த இக்கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா நடைபெறும். 64 திருவிளையாடல்களில் ‘நரியை பரியாக்கியது’ என்பதும் ஒன்றாகும். மதுரையை ஆண்ட அரிமர்த்தன மன்னரிடம் அமைச்சராக பணிபுரிந்த மாணிக்கவாசகர் பாண்டியன் நாட்டின் படைக்கு குதிரை வாங்க பொன்னும், பொருளுடனும் அனுப்பப்பட்டார். திருப்பெருந்துறை எனும் தலத்தை அடைந்தவுடன் அங்கே சிவாலய திருப்பணி செய்ய, குதிரை வாங்க அனுப்பிய பொருளை மாணிக்க வாசகர் செலவிட்டார். அப்போது மன்னரிடமிருந்து அழைப்பு வந்ததும், வெறுங்கையுடன் இருந்த மாணிக்கவாசகர் இறைவனை தொழுதார். ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என இறைவனும் அருள்புரிந்தார். அதை நம்பி மாணிக்கவாசகர் மன்னரை சந்தித்தார். அப்போது குதிரைகளுடன் வராமல் தனியாக வந்ததால் ஆத்திரமடைந்த மன்னர், மாணிக்கவாசகத்தை சிறையில் அடைத்தார்.

நரிகளும், குதிரைகளும்..

இதுபற்றி மாணிக்கவாசகர் இறைவனிடம் முறையிட்டதும், காட்டிலுள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக மாற்றி, தானே தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி வந்து இறைவன் அனைத்து குதிரைகளையும் அரசனிடம் ஒப்படைத்தார். ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் நரிகளாக மாறி அங்கிருந்து காட்டுக்குள் ஓடிவிட்டன. இவ்வாறு நரியை பரியாக்கி திருவிளையாடல் புரிந்த சொக்கநாத பெருமானை வழிபடும் வகையில் தொன்று தொட்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு மறுத்ததுடன், உயிருள்ள நரியை வைத்து விழாவை நடத்த முயன்றால் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோ ருக்கு மாவட்ட வன அலுவலர் நிகர் ரஞ்சன் கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்த ஆண்டும் பொம்மை நரியை வைத்தே திருவிழா நடத்த வேண்டிய சூழல் மீனாட்சி அம்மன்கோயில் நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது.

6 ஆண்டு சிறை

இதுபற்றி மாவட்ட வன அலுவலர் நிகர் ரஞ்சன் கூறியது: வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி நரியை விரட்டிப் பிடிப்பதோ, பிடிக்க முயற்சித்து விஷம் வைப்பதோ, வலை விரிப்பதோ, கூண்டில் அடைப்பதோ, கொல்லுவதோ ஜாமீனில் வர முடியாத அளவுக்கு தண்டனைக்குரிய குற்றம். குறைந்தபட்சம் ஓராண்டு முதல் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். நரிகள் விரட்டி பிடிக்கப்படுவதைத் தடுக்க காடுகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளுமாறு வன காவலர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x