Published : 08 Sep 2018 03:33 PM
Last Updated : 08 Sep 2018 03:33 PM

ராகுல் காந்தியின் கைலாஷ் யாத்திரை புகைப்படங்கள் போட்டோஷாப் செய்யப்பட்டதா?- பாஜகவுக்கு காங்கிரஸ் பதிலடி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 31-ம் தேதியன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு சென்றார். பின்னர் அங்கிருந்து மானசரோவர் சென்றார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கைலாஷ் பயண அனுபவத்தை பதிவிட்டார். அதில், கைலாஷ் சென்ற ஒருவரிடம் கேட்டால், தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பை, அழகிய பயண அனுபவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவார். நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த ஏரியின் தண்ணீர், சுத்தமாகவும் அமைதியாகவும் காட்சியளிக்கிறது. யார் வேண்டுமானாலும் தண்ணீரை எடுத்து பருகலாம். இங்கு வெறுப்பில்லை. இதனால் தான், இந்தியாவில் நாம் இதனை வணங்குகிறோம்’’ எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் கைலாஷ் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தியுடன் செல்லும் சக பயணிகள், ஆர்வத்துடன் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஆன்மிக பயணம் மேற்கொள்ளும்போது, காங்கிரஸ் தலைவருடன் புகைப்படம் எடுக்க கிடைத்த வாய்ப்பை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

சாதாரண பயணிகளுடன் சேர்ந்து ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் அனுபவம் மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் காந்தியும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த புகைப்படங்கள் குறித்து பாஜவினர் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர். ராகுல் காந்தி கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் செல்லவில்லை, வெளியிடப்படும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோஷாப் புகைப்படங்கள் என்று பாஜகவினரும் சமூக வலைதளங்களில்  ஒரு சிலரும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், ‘‘ராகுல் காந்தி போலிப்புகைப்படங்களை வெளியிடுகிறார். புகைப்படத்தில் ராகுல் காந்தி கையில் இருக்கும் கைத்தடியின் நிழல் எங்கே? ஆகவே இது போலிப்புகைப்படம் ’’ என்று தெரிவித்து இருந்தார். இதுபோலவே, பாஜக சமூக ஊடக பொறுப்பாளர் பிரிதி காந்தி, எம்எல்ஏ மஞ்சிந்தர் சிங் உள்ளிட்டோரும் ராகுல் காந்தியின் கைலாஷ் புகைப்படங்களை கிண்டல் செய்திருந்தனர்.

இதையடுத்து பாஜகவுக்கு பதிலடி தரும் வகையில், புதிய புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில், கைலாஷ் மலையின் பின்னணியில் ராகுல் காந்தி நிற்பது புகைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும், அவரது மலையேற்ற விவரங்களையும் குறிப்பிட்டு இருந்தது.

ராகுல் காந்தி, 34.31 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 6 மணி நேரத்தில் கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் உடல் எடை குறைந்தது தொடர்பான தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x