Published : 19 Sep 2018 03:21 PM
Last Updated : 19 Sep 2018 03:21 PM

சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த விவகாரம்: டெல்லி பாஜக தலைவருக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்

 டெல்லியில் நீதிமன்ற உத்தரவை மீறி சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை உடைத்த பாஜக தலைவர் 25-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் முறையான அனுமதி பெறாமல் கட்டிடங்களும் வீடுகளும் கட்டப்பட்டு வருவதாகவும், முறையான அனுமதி பெறாமல் வீட்டிலேயே தொழில் செய்வதாகவும் புகார்கள் எழுந்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் கடும் நடவடிக்கைகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் டெல்லி மாநகராட்சி இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம் மீண்டும் டெல்லி மாநகராட்சியை எச்சரித்து நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தது. இதனையடுத்து அங்கு அனுமதி பெறாத கட்டிடங்கள், வீடுகளுக்கு சீல் வைக்கும் நடவடிகை துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கிழக்கு டெல்லியின் கோகல்புரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அனுமதியின்றி பால் பண்ணை செயல்பட்டு வந்ததாக தகவல் கிடைத்தது. இதன்பேரில், கடந்த வாரம் அங்கு சென்ற நகராட்சி அதிகாரிகள், அந்த வீட்டுக்கு சீல் வைத்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி பாஜக தலைவரரும், எம்.பி.யுமான மனோஜ் திவாரி, கட்சி நிர்வாகிகளை சந்திப்பதற்காக கோகல்புரிக்கு சென்றிருந்தார். அப்போது சீல் வைக்கப்பட்ட வீட்டின் பூட்டை, திவாரி உடைத்தார். சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதனை அகற்றினார். வீட்டின் பூட்டை உடைத்த மனோஜ் திவாரி மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.

இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. வழக்கை விசாரித்த மதன்  பி லோகூர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு ஒரு எம்.பி. செயல்படுவதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது, இதுகுறித்து மனோஜ் திவாரி 25-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x