Published : 19 Sep 2018 09:54 AM
Last Updated : 19 Sep 2018 09:54 AM

ஓராண்டில் 8 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு 2017-ம் ஆண்டில் 8,02,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று ஐ.நா. ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. குழந்தைகள் நிதியம், உலக சுகாதார அமைப்பு, ஐ.நா. மக்கள் தொகை பிரிவு, உலக வங்கி குழுமம் ஆகியவை இணைந்து, உலகளாவிய அளவில் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 2017-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 15 வயதுக்கு உட்பட்ட 63 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் 54 லட்சம் குழந்தைகள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள். உலகில் ஒவ்வொரு 5 விநாடிக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டில் 8,02,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு 2 நிமிடத்துக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது. கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பு குறைந்துள்ளது. 2016-ல் இந்தியாவில் குழந்தைகள் உயிரிழப்பு 8.67 லட்சமாக இருந்தது.

எனினும் குழந்தைகள் அதிகம் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் நைஜீரியா உள்ளது. அந்த நாட்டில் கடந்த 2017-ம் ஆண்டில் 4,66,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் 3-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 3,30,000 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x