Published : 04 Sep 2014 04:20 PM
Last Updated : 04 Sep 2014 04:20 PM

காஷ்மீரில் காட்டாற்று வெள்ளத்தில் பேருந்து சிக்கியது: 50 பேர் கதி என்ன?- மீட்புப் பணி தீவிரம்

ஜம்மு - காஷ்மீரில், ரஜோரி மாவட்டத்தில் கனமழையால் காம்பீர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் காணாமல் போன 50-க்கும் அதிகமான பயணிகளும் பலியாகியிருக்கலாம் என உள்ளூர் போலீஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும், விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

4 பேர் மீட்பு:

சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டவுடன் விரைந்த ராணுவ மீட்புக் குழுவினர் பேருந்தில் இருந்து வெளியே குதித்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 பேரை மீட்டனர். மீட்கப்பட்ட 4 பேரில் ஒருவர் பேருந்தின் ஓட்டுநர், மற்றொருவர் நடத்துனர் ஆவார். ஓட்டுநர் அளித்த தகவலின்படி பேருந்தில் 50-க்கும் அதிகமானோர் இருந்தது உறுதியாகியுள்ளது.

22 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்:

கடந்த சில தினங்களாக காஷ்மீரில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால், அங்கு கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் கன மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.

சிந்து நதியின் கிளை நதியான ஜீலம் நதியில் அபாய எல்லைக்கும் 4 அடிக்கு மேலே வெள்ளம் சீறிப் பாய்கிறது. ஜீலம் நதி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

50 பேர் நிலை என்ன?

திருமண விழாவிற்காக சுமார் 50-க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ரஜோரி மாவட்டத்தின் லாம் - தர்ஹால் - நவ்ஷேரா இணைப்புச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, காம்பீர் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று வெள்ளம் சாலையில் கரைபுரண்டோடியது. வெள்ளத்தில் சிக்கிய பேருந்து முன்னேறவும் முடியவில்லை, வந்த வழியில் திரும்பவும் முடியவில்லை. சில நிமிடங்களிலேயே வாகனம் டிரைவர் கட்டுப்பாட்டில் இருந்து விலகி ஆற்றில் கவிழ்ந்தது. வெள்ளப்பெருக்கின் சீற்றத்தில் பேருந்து அடித்துச் செல்லப்பட்டது. ஆற்றில் வெள்ளம் சீறிப் பாய்வதால் 50-க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்பது இதுவரை தெரியவில்லை.

மீட்புப் பணியில் சிக்கல்:

சம்பவ பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதே வேளையில், வெள்ளப் பெருக்கு அதிகமாக இருப்பதால் மீட்புக் குழுவினர் களத்தில் இறங்கி செயல்படுவதில் பெரும் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பேருந்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

முதல்வர் உத்தரவு:

முன்னதாக, மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் பேரிடரை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x