Published : 08 Sep 2014 11:43 AM
Last Updated : 08 Sep 2014 11:43 AM

குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் சந்திப்பு: சிபிஐ இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் நிலக்கரி ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை சந்தித்தது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி சிபிஐ இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்குகள் உச்ச நீதிமன்றத் தின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன. இந்த வழக்குகளில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது வீட்டில் பலமுறை சந்தித்துப் பேசியதாக குற்றம்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் தத்து மற்றும் அனில் தவே அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் வீட்டு பார்வையாளர் பதிவேடு விவரங்களை மூடி ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் சமர்ப்பித்தார். இந்த விவரங்களை சிலர் தன்னிடம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குகளிலநருந்து சிபிஐ இயக்குநர் தானே முன்வந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் வாதிட்டார்.

இந்த விஷயத்தைக் கிளறினால், வழக்கு விசாரணையை பாதிக்கக்கூடிய பல உண்மைகளை வெளியிட வேண்டியிருக்கும் என்று சிபிஐ இயக்குநர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதை ஏற்காத நீதிபதிகள் கூறியதாவது:

இந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் நடந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நியாயமான விசாரணை நடப்பதை உறுதி செய்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இயக்குநரை நேரில் சந்தித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படி சந்தித்தது உண்மை என்று தெரியவந்தால், சிபிஐ இயக்குநர் இந்த வழக்கு தொடர்பாக எடுத்த அனைத்து முடிவுகளையும் நீதிமன்றம் ரத்து செய்ய வேண்டி வரும். மேலும், இக்குற்றச்சாட்டு குறித்து சிபிஐ இயக்குநர் ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராஜேஷ்வர் சிங்குக்கு பணி

2ஜி அலைக்கற்றை ஊழல் மற்றும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரித்து வந்த ராஜேஷ்வர் சிங்கை அமலாக்கப்பிரிவு துணை இயக்குநராக நியமிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மூன்று நாட்களுக்குள் அமல்படுத்தும்படி நிபந்தனை விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x