Last Updated : 09 Sep, 2018 05:53 PM

 

Published : 09 Sep 2018 05:53 PM
Last Updated : 09 Sep 2018 05:53 PM

எதிர்கட்சிகளைக் குறி வைத்து புதிய கூட்டணிகள்: பின்னணியில் பாஜகவா?

தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு எனும் பெயரில் எதிர்கட்சிகள் ஒன்றிணைப்பு அன்றாட செய்தியாகி வருகிறது. இது தேசிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை ஏற்கும் பாஜகவின் மூச்சை முட்ட வைக்கிறது இதை ஆசுவாசப்படுத்தும் வகையில் எதிரணியில் இருக்கும் சிறிய கட்சிகள் தனியாக ஒன்றிணைய ஆரம்பித்துள்ளன.

பல்வேறு மாநிலங்களில் நிகழ்ந்து வரும் இச்சிறு கூட்டணிகள் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற வலுவான கட்சிகளின் கூட்டணிகளுக்கு மிரட்டலாக உருவெடுக்கத் துவங்கி உள்ளன. இதன் பின்னணியில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

மகராட்டிராவில் வலுவான கூட்டணி

வலுவான எதிர்கட்சிகளில் முதல் கூட்டணி, மகராட்டிராவில் உருவாகி உள்ளது. இங்கு காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாதக் காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் ராஜு சேத்தியின் ஸ்வபிமானி பக்ஸா ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன. இவர்கள் மக்களவை தேர்தலுக்காக தொகுதி பங்கீடும் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில் தயாராக உள்ளது.

உ.பியில் எதிர்கட்சிகள் கூட்டணி

அடுத்து முக்கிய மாநிலமான உபியிலும் எதிர்கட்சிகளின் கூட்டணி இறுதிநிலையை எட்டி வருகிறது. தமிழகத்தின் திமுக, அதிமுகவை போல் இருந்த முக்கிய கட்சிகளான

சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் இணைந்துள்ளன. இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியும் இணைய உள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்களில் கூட்டணி

இவ்விரு மாநிலங்களில் உருவான கூட்டணியின் தாக்கம் ராஜஸ்தான், மபி மற்றும் சத்தீஸ்கரிலும் ஏற்பட்டுள்ளது. இம்மாநிலங்களில் வலுவான எதிர்கட்சியானக் காங்கிரஸ் தம்முடன் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. இங்கு அதற்கானப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பெரிய கூட்டணிகளை குறி வைத்து புதிதாக சிறிய கட்சிகள் ஒன்று சேரத் துவங்கி உள்ளன.

இதற்கு அவர்கள் வலுவானக் கட்சிகளால் தனித்து விடப்பட்டது உள்ளிட்ட காரணங்களை அடுக்குகின்றனர். இதனால், எதிர்கட்சிகள் பட்டியலில் இடம்பெற்ற இந்த சிறிய கட்சிகளால் பாஜகவிற்கு பலன் கிடைக்கத் துவங்கி விட்டது.

உவைஸியுடன் அம்பேத்கர் பேரன்

மகராஷ்டிராவில் அம்பேத்கரின் பேரனான ஐதராபாத் எம்பியான அசாசுத்தீன் உவைஸியுடன் பாபா சாஹேப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் கைகோர்க்க முடிவு செய்துள்ளார். இதில், பிரகாஷ் அம்பேத்கரின் பரிபா பகுஜன் மஜாசங் எனும் கட்சி சார்பில் அவர் மகராட்டிரா சார்பில் இருஅவைகளிலும் எம்பியாக இருந்துள்ளார். உவைஸியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் கட்சிக்கு மகராட்டிராவில் முதல்முறையாக இரண்டு எம்எல்ஏக்களும், அவுரங்காபாத்தின் மாநகராட்சியில் முக்கிய எதிர்கட்சியாகவும் உள்ளது.

மகராட்டிரா, உபி, பிஹார் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் போட்டியிடுவது அவர்கள் திட்டம். பாஜகவின் எதிர்கட்சிகளான

இவர்களுக்கு பெரிய அளவில் வாக்குகள் கிடைக்கும் எனக் கூற முடியாது. அதேசமயம், அவர்களுக்கு தலீத் மற்றும் முஸ்லிம் சமூகத்தில் கிடைக்கும் சில ஆயிரம் வாக்குகள் முக்கிய எதிர்கட்சி கூட்டணிகளின் பங்கை வெட்டிக் குறைக்கும்.

பீம் ஆர்மி

மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் கொண்ட பெரிய மாநிலமான உபியில் மட்டும் சிறிய எதிர்கட்சிகளின் கூட்டணிகள் ஒன்றுக்கும் மேற்பட்டு உருவாகி வருகின்றன. இங்குள்ள தலீத் சமூகத்தை குறி வைத்து பீம் ஆர்மி’ எனும் அரசியல் சமூக அமைப்பு ஒரு கட்சி உருவாகி வருகிறது. சிறையில் இருக்கும் அதன் தலைவர் ‘ராவண்’ என அழைக்கப்படும் சந்திரசேகர் ஆசாத்.

இவர் கடந்த வருடம் முராதாபாத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் நிகழ்ந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசியவாத பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. தலீத் சமூகத்தில் ராவணுக்கு உபியில் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. தேர்தலில் இவர் பெறும் வாக்குகள் மாயாவதியிடம் இருந்து பிரிந்ததாக இருக்கும்.

ஷிவ்பால் ஆபத்து

மாயாவதியின் முக்கிய கூட்டணிக் கட்சியான சமாஜ்வாதியின் வாக்குகளை பிரிக்க அதன் தலைவர் அகிலேஷ்சிங் யாதவின் சித்தப்பா ஷிவ்பால் தயாராகி வருகிறார். சமாஜ்வாதி மதசார்பற்ற முன்னணி எனும் பெயரிலான அவரது கட்சி சமாஜ்வாதியால் ஒதுக்கப்பட்ட சிறிய கட்சிகளை ஒன்று சேர்க்கும் என ஷிவ்பால் அறிவித்துள்ளார்.

பின்னணியில் பாஜக?

இந்த அறிவிப்பிற்கு ஒரு நாள் முன்னதாகவும் ஷிவ்பால் உபியின் பாஜக தலைவர்களுடன் சந்திப்பு நடத்தி இருந்தார். இதற்கு முன் உபி முதல்வர் யோகி அதித்யநாத் உள்ளிட்ட மேலும் சில பாஜக தலைவர்களையும் சந்தித்துள்ளார்.

அமர்சிங் தலையீடு

இதற்கான ஏற்பாடுகளை ஷிவ்பாலுக்கு மறைமுகமாக செய்வதாக அமர்சிங் மீது புகார் உள்ளது. இவர் சமாஜ்வாதியில் இருந்தது வரை ’அரசியல் சாணக்யர்’ என அழைக்கப்பட்டவர். மீண்டும் சமாஜ்வாதியில் சேர முயன்று முடியாதவர் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டி வந்தது அமர்சிங் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளது.

சமீபத்தில் தொழிலதிபர் கூட்டத்திற்கு லக்னோ வந்த பிரதமர் மோடியும் தொழிலதிபர்கள் கூட்டத்தில் அமர்சிங்கை குறிப்பிட்டு பேசினார். இதன் பின்னணியில் இருப்பது தன் தலைவர் அமித்ஷா எனப் பேசப்பட்டாலும், கவலைப்படாமல் தேர்தல் அறுவடைக்கு தயாராகி வருகிறது பாஜக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x