Last Updated : 15 Sep, 2018 06:54 PM

 

Published : 15 Sep 2018 06:54 PM
Last Updated : 15 Sep 2018 06:54 PM

பிரதமர் மோடிக்கு ‘வேண்டப்பட்ட’ சிபிஐ அதிகாரிதான் மல்லையா தப்பிச் செல்ல காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வங்கிக் கடன் மோசடியில் சிக்கி வழக்கையும் நாடுகடத்தலையும் எதிர்கொண்டு வரும் விஜய் மல்லையா தப்பிச் செல்வதற்கு லுக் அவுட் நோட்டீசை வலுவிழக்கச் செய்த அதிகாரி பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றம்சாட்டியுள்ளார்.

அன்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா தான் லண்டன் வருவதற்கு முன்பாக நிதியமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்ததாகத் தெரிவிக்க அதனைச் சுற்றி கடும் வாதப்பிரதிவாதங்கள் எழுந்தன.

அருண் ஜேட்லி அது ஒரு முறைசாரா சந்திப்பு, அதில் ஒன்றும் நிகழவில்லை என்று கூற சுப்பிரமணியன் சுவாமி விஜய் மல்லையா மீது கடுமையான லுக் அவுட் நோட்டீஸ் இருந்தது, பயணம் செய்வதைத் தடுக்கும் வலுவான நோட்டீஸ், பயணத்தை தெரிவித்தால் போதும் என்ற நோட்டீஸாக வலுவிழந்ததற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பினார், மேலும் மல்லையா லண்டனுக்கு ஏகப்பட்ட லக்கேஜ்களுடன் பயணித்ததையும் சுட்டிக் காட்டினார் சுவாமி.

இந்நிலையில் பாஜக காங்கிரஸ் மீது குற்றம்சாட்ட, பியூஷ் கோயல், மல்லையா ஒரு குற்றவாளி அவர் சொல்வதையெல்லாம் சீரியசாக எடுத்துக் கொள்வதா என்று கேட்டார்.

இந்நிலையில் ராகுல் காந்தி, சிபிஐயில் உள்ள குஜராத் அதிகாரி ஏ.கே.ஷர்மாதான் லுக் அவுட் நோட்டீசை நீர்த்துப் போகச் செய்தவர் இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டப்பட்ட அதிகாரி என்றும் குற்றம்சாட்டியதோடு, இதே அதிகாரிதான் நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி தப்பிச் செல்லவும் காரணமாக இருந்தவர் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன் ட்விட்டரில், “சிபிஐ இணை இயக்குநர் ஏ.கே.ஷர்மா, விஜய் மல்லையாவின் லுக் அவுட் நோட்டீசை வலுவிழக்கச் செய்தார். இதுதான் மல்லையாத் தப்பிச் செல்ல காரணமாக அமைந்தது. ஷர்மா குஜராத்தைச் சேர்ந்த அதிகாரி. பிரதமர் மோடிக்கு மிகவும் வேண்டப்பட்டவர். நிரவ் மோடி, மெகுல் சோக்ஸி தப்பிச் செல்லும் போதும் இதே ஷர்மாதான் பொறுப்பில் இருந்தார்” என்று பதிவிட்டுள்ளார்.

வங்கிக் கடன் மோசடிக்குப் பிறகே மல்லையா தப்பிச் சென்றதற்கு மோடியையும் அருண் ஜேட்லியையும் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x