Last Updated : 08 Sep, 2018 09:25 PM

 

Published : 08 Sep 2018 09:25 PM
Last Updated : 08 Sep 2018 09:25 PM

‘கேரள அரசு, போலீஸ், தேவாலயம் யாரும் எங்களுக்கு ஆதரவு தரவில்லை’ - பாதிரியாருக்கு எதிரான போராட்டத்தில் கன்னியாஸ்திரிகள் கண்ணீர்

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ரோமன் கத்தோலிய பிஷப் பிராங்கோவை கைது செய்யக் கோரி நாங்கள் போராட்டம் நடத்துகிறோம், ஆனால், கேரள அரசு, போலீஸார், தேவாலயம் என யாரும் எங்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை என்று கன்னியாஸ்திரிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டுவரை கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றியவர் பாதிரியார் பிராங்கோ மூலக்கால். இவர் தான் பணியாற்றிய காலத்தில் கன்னியாஸ்திரி ஒருவரைப் பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி அப்போது தேவாலய நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையுடுத்து பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி குருவிளங்காடு போலீஸில் புகார் செய்தார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான பாதிரியார் பிராங்கோ மூலக்கால், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் பிஷப்பாக இருந்து வருகிறார். ஆனால், கன்னியாஸ்திரி கூறும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது, பொய்யானது என்று பிராங்கோ மறுத்துள்ளார். கடந்த போலீஸார் ஜலந்தர் சென்று பிராங்கோவின் வீட்டில் விசாரணை நடத்தினார்கள். பிராங்கோவின் தந்தை அந்தோணி, ஜலந்தர் தேவாலயத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பாதிரியார் பீட்டர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினார்கள்.

இந்த பாதிரியார் பிராங்கோவால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் 114 பக்க அளவில் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீஸார் நடத்திய விசாரணையில் பாதிரியார் பிராங்கோ தனதுபதவியை பயன்படுத்தி கன்னியாஸ்திரிகளிடம் தவறாக நடந்துள்ளது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு கடந்த மாதம் கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, கோட்டயம் போலீஸ் டிஎஸ்பி நீதிமன்றத்தில் அளித்த அறிக்கையில், விசாரணை தீவிரமாகச் செல்கிறது, எந்தவிதமான சார்பும் இல்லாமல் செல்கிறது என்று தெரிவித்தார்.

இந்நிலையில், பாதிரியார் பிராங்கோவுக்கு எதிராகப் புகார் அளித்து 70 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர் கைது செய்யப்படாததைக் கண்டித்து இன்று கோட்டயத்தில் கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினார்கள்.

கத்தோலிக்க சீரமைப்பு அமைப்புகள், கேரள கத்தோலிக்க தேவாலய புனரமைப்பு இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் பங்கேற்றன. அப்போது பாதிரியார் பிராங்கோவுக்கு எதிராகப் பாதைகளை ஏந்தி கன்னியாஸ்திரிகள் அமர்ந்திருந்தனர்.

இந்தப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிகள் சார்பில் 5 கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் இருந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் வேதனையுடன் நிருபர்களிடம் கூறியதாவது:

எங்களுடன் இருக்கும் கன்னியாஸ்திரி பாதிரியார் பிராங்கோ மீது புகார் அளித்து 70 நாட்கள் ஆகிறது நடவடிக்கை இல்லை. நாங்கள் எங்கள் சகோதரிக்காக போராடுகிறோம். அவருக்கு தேவாலயத்திலும் நீதி மறுக்கப்படுகிறது, கேரள அரசிலும், போலீஸிலும் நீதி மறுக்கப்படுகிறது. எங்கள் சகோதரிக்கு நீதி கிடைக்க எந்த எல்லைக்கும் செல்லத் தயார்.

பிராங்கோவுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருந்தும் அவர் ஏன் கைது செய்யப்படவில்லை எனத் தெரியவில்லை. எங்களிடம் போலீஸார் பலமுறை வந்து விசாரித்துச் சென்றார்கள் ஆனால், அந்தப் பாதிரியாரிடம் ஒருமுறை மட்டுமே விசாரித்தனர்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கன்னியாஸ்திரிகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்துக்கு முன்னாள் முதல்வர்கள் அச்சுதானந்தன், உம்மன் சாண்டி ஆகியோர் ஆதரவு அளித்துள்ளனர். கன்னியாஸ்திரிகளின் கோரிக்கையைக் கருணையுடன் கேட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர்கள் இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x